×

பள்ளிப்பட்டு அருகே நிலுவை தொகையை வழங்காத தனியார் சர்க்கரை ஆலை: கரும்பு விவசாயிகள் குற்றச்சாட்டு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு அருகே விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை வழங்குவதில், தனியார் சர்க்கரை ஆலை நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டு வருவதாக கரும்பு விவசாயிகள் குற்றம் சாட்டுகிறனர். பள்ளிப்பட்டு அருகே ஆந்திரா எல்லைப் பகுதி நெல்வாயில் தனியாருக்கு சொந்தமான சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு கரும்பு அனுப்பிவைத்த 15 நாட்களுக்குள் நிலுவைத் தொகை வழங்கப்பட்டு வந்ததால், பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி சுற்று வட்டார பகுதிகளிலிருந்து கரும்பு விவசாயிகள் சாகுபடி செய்த கரும்புகளை ஏற்றுமதி செய்து வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன்பு அனுப்பிவைத்த கரும்புக்கு நிலுவைத் தொகை இதுவரை வழங்கப்படவில்லை. லாரிகளுக்கு வழங்கும் தொகை முடிவு செய்வதில் ஏற்பட்டுள்ள காலதாமதம் காரணமாக, நிலுவைத் தொகை வழங்க தாமதம் ஏற்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்து வருவதாக விவசாயிகள் கூறுகின்றனர். கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு அனுப்பினால் காலதாமதம் ஏற்படுவதால், தனியார் ஆலைக்கு அனுப்பி வருவதாகவும், தனியார் ஆலையும் காலம் கடத்தி வருவதாகவும், இதனால் கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்து உரிய நேரத்தில் நிலுவைத் தொகை கிடைக்காமல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். எனவே தனியார் சர்க்கரை ஆலை தர வேண்டிய நிலுவைத் தொகையை உடனே கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post பள்ளிப்பட்டு அருகே நிலுவை தொகையை வழங்காத தனியார் சர்க்கரை ஆலை: கரும்பு விவசாயிகள் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : Pallipatu ,Pallipattu ,Dinakaran ,
× RELATED வெயிலில் சுருண்டு விழுந்து ஆடு மேய்த்தவர் பரிதாப பலி