×

119 தொகுதிகளிலும் விறுவிறுப்பான தேர்தல் தெலங்கானாவில் 64.26% வாக்குப்பதிவு: நடிகர், நடிகைகள் வரிசையில் நின்று வாக்களித்தனர்

திருமலை: தெலங்கானாவில் விறு விறு வாக்குப்பதிவு நேற்று நடந்தது. இதில் 64.26 சதவீதம் வாக்குகள் பதிவானது. தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நவம்பர் 30ம்தேதி (நேற்று) தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதில் ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் இதர கட்சிகள் போட்டியிடுகின்றன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்பட முக்கிய தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்தனர்.

காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் உள்ளிட்ட தலைவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பிஆர்எஸ் கட்சி சார்பில் அதன் தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திரசேகரராவ் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டினர். இதைத்தொடர்ந்து தெலங்கானா மாநிலத்தில் 119 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு விறு விறுப்பாக தொடங்கியது.

முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு 119 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்காளர்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்குச்சாவடி மையங்களுக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். 13 தொகுதிகளில் மாவோயிஸ்ட்களின் நடமாட்டம் உள்ளதால் சில தொகுதிகளில் 1 மணி நேரம் முன்னதாக மாலை 4 மணிக்கே வாக்குப்பதிவு முடிக்கப்பட்டது.

ஐதராபாத் ஜூப்ளிஹில்ஸ், பிலிம்நகரில் உள்ள வாக்கு மையத்தில் நடிகர் சிரஞ்சீவி, ஜூனியர் என்.டி.ஆர், அல்லு அர்ஜுன், ராணா, வெங்கடேஷ், ராஜமவுலி, கோபிசந்த், நடிகர் நாகார்ஜுனா, அமலா, நாக சைத்தன்யா, பிரபாஸ், விஜய்தேவரகொண்டா உள்ளிட்ட நடிகர்கள், இயக்குனர்கள், ஒன்றிய இணை அமைச்சர் கிஷன் ரெட்டி, அமைச்சர் கே.டி.ஆர், எம்.எல்.சி கவிதா, மெதம் மாவட்டம் சிந்தமடகாவில் முதல்வர் கே.சி.ஆர். வாக்களித்தனர். அனைத்து தொகுதிகளிலும் வாக்குப்பதிவு முடிந்த நிலையில் சராசரியாக 64.26 சதவீதம் வாக்குகள் பதிவானது.

The post 119 தொகுதிகளிலும் விறுவிறுப்பான தேர்தல் தெலங்கானாவில் 64.26% வாக்குப்பதிவு: நடிகர், நடிகைகள் வரிசையில் நின்று வாக்களித்தனர் appeared first on Dinakaran.

Tags : Telangana ,Thirumalai ,
× RELATED தெலங்கானா மாநில பாஜக தலைவர் ஓட்டலில்...