×

வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது விபரீதம்; மழை நீரில் செல்போனில் பேசி கொண்டு சென்ற வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி: மேற்கு மாம்பலத்தில் பரபரப்பு

சென்னை: வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல தேங்கி நின்ற மழை நீரில் செல்போனில் பேசியபடி சென்ற வாலிபர் ஒருவர் திடீரென மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் மேற்கு மாம்பலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தாம்பரம் அடுத்த புது பெருங்களத்தூர் திருவள்ளுவர் சாலை பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன்(23). இவர், மேற்கு மாம்பலம் ஏழாவது நிழல் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். வழக்கம் போல் நேற்று இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்ல மணிகண்டன் புறப்பட்டார். அப்போது கன மழை காரணமாக மேற்கு மாம்பலம் பகுதியில் அதிகளவில் தண்ணீர் தேங்கி இருந்தது. அப்போது மணிகண்டன் குடை பிடித்தப்படி இரவு 10.30 மணி அளவில் மேற்கு மாம்பலம் ஏரிக்கரை சாலை வழியாக தேங்கிய மழை நீரில் தனது செல்போனில் பேசியபடி பேருந்து நிறுத்தம் நோக்கி சென்றார்.

அப்போது திடீரென மணிகண்டன் பேசி கொண்டிருந்த செல்போனை போட்டுவிட்டு கீழே விழுந்து துடிதுடித்தார். இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் ஓடி வந்து பார்ப்பதற்குள் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதேநேரம் ஒரு அடி ஆழ தண்ணீரில் மணிகண்டன் பயன்படுத்திய செல்போன் ஆப் ஆகாமல் செயல்பாட்டில் இருந்தது. உடனே பொதுமக்கள் அந்த செல்போனை எடுக்க முயன்ற போது, லேசாக மின்சாரம் பாய்ந்தது. செல்போன் லேசாக கருகிய நிலையில் இருந்தது. உடனே சம்பவம் குறித்து அசோக் நகர் போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் அளித்தனர். அதன்படி விரைந்து வந்த போலீசார் உயிரிழந்த மணிகண்டன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தண்ணீரில் விழுந்தும் செல்போன் ஆப் ஆகாததால் செல்போனை பொதுமக்கள் ஒரு துணியில் மடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அதைதொடர்ந்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து, மணிகண்டன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது செல்போனில் ஏற்பட்ட பாதிப்பால் சுருண்டு விழுந்து உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், மணிகண்டன் பயன்படுத்திய செல்போனை போலீசார் தடயவியல் ஆய்வுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால் மேற்கு மாம்பலம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

வடமாநில வாலிபர் பலி: சென்னை தி.நகர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வடமாநிலத்தை சேர்ந்த அப்பு அணீப்(32) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று இரவு பணி முடிந்து தனது அறைக்கு செல்ல அப்பு அணீப் வாணி மஹால் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். கன மழை காரணமாக சாலையோரம் இருந்த மின்கம்பம் அருகே மழை நீர் தேங்கி இருந்தது. அப்பு அணீப் மழை நீரில் இறங்கி கடந்து செல்ல முயன்றார்.

அப்போது விளக்கு கம்பத்தில் மழை நீரில் பரவி இருந்த மின்சாரம் அப்பு அணீப் மீது பரவியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பாண்டி பஜார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த அப்பு அணீப் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலை முடிந்து வீட்டிற்கு செல்லும் போது விபரீதம்; மழை நீரில் செல்போனில் பேசி கொண்டு சென்ற வாலிபர் மின்சாரம் பாய்ந்து பலி: மேற்கு மாம்பலத்தில் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : West Mambalam ,CHENNAI ,
× RELATED காரைக்குடி மற்றும் சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை!!