×

திருவொற்றியூர், மணலி பகுதிகளில் வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது: அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை

திருவொற்றியூர்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த மழை தொடர்மழையால் 16வது வார்டுக்கு உட்பட்ட கன்னியம்மன்பேட்டை, ராஜீவ் காந்தி நகர், குளக்கரை தெரு உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. வார்டு கவுன்சிலர் ராஜேந்திரன் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிக்கு சென்று பொக்லைன் எந்திரங்கள் மூலம் தேங்கிய மழை நீரை தற்காலிக கால்வாய் வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து மழை தேங்கும் இடங்கள் கண்டறியப்பட்டு அந்த இடங்களில் மணலி மண்டலம் சார்பில் மோட்டார்கள் மூலம் மழைநீரை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதனிடையே புழல் ஏரியில் இருந்து உபரிநீர் 200 கன அடி திறக்கப்பட்டதால் அதில் இருந்து வரக்கூடிய பாதையை ஒட்டியுள்ள 17வது வார்டுக்கு உட்பட்ட ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் உபரிநீர் சூழ்ந்துள்ளது. நேற்று நள்ளிரவில் மாதவரம் வடக்கு பகுதி திமுக செயலாளர் புழல் நாராயணன் மற்றும் திமுகவினர் பாதிக்கபட்ட பகுதிக்கு சென்று பொதுமக்களை சந்தித்து பாதுகாப்பு இடங்களுக்கு செல்லும்படி அறிவுறுத்தியதுடன் அவர்களுக்கு தேவைான ரொட்டி, பிஸ்கட் போன்ற உதவிகளை வழங்கினர். தொடர்ந்து உபரி நீரை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.திருவொற்றியூர் மண்டலம் 6வது வார்டில், கலைஞர் நகர், ராஜா சண்முகபுரம், அம்பேத்கர் நகர் போன்ற ஒரு சில இடங்களில் மழைநீர் தேங்கியது.

கவுன்சிலர் சாமுவேல் திரவியம் தலைமையில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் தற்காலிக கால்வாய்களை வெட்டியும் மோட்டார்கள் மூலமும் தேங்கிய மழை நீரை அப்புறப்படுத்தினர். இன்றும் கனமழை பெய்யும் என்பதால் திருவொற்றியூர், மணலி மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் பல குடியிருப்புகளில் சூழும் நிலைமை உள்ளது. அவ்வாறு பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளவும் பாதுகாப்பான இடங்களில் பொதுமக்களை தங்கவைத்து உணவுகள் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று மண்டல குழு தலைவர்கள் தி.மு.தனியரசு, ஏ.வி.ஆறுமுகம் ஆகியோர் தெரிவித்தனர்.வடசென்னை கடலோர பகுதிகளில் தொடர்ந்து கடல் சீற்றத்துடன் காணப்படுவதுடன் காற்றும் பலமாக வீசுவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

The post திருவொற்றியூர், மணலி பகுதிகளில் வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது: அதிகாரிகள் போர்க்கால நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Manali ,Chennai ,16th Ward ,
× RELATED நிதி ஒதுக்கப்பட்டும் கிடப்பில் சாலை பணி: பொதுமக்கள் கோரிக்கை