×

செங்குன்றம் பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் சுற்றி திரியும் மாடுகள்: மாவட்ட உதவி இயக்குநர் ஆய்வு

புழல்: செங்குன்றம்.நாரவாரிக்குப்பம் பேரூராட்சியில் அமைந்துள்ள செங்குன்றம் மாநகர போக்குவரத்து கழகத்தின் பேருந்து நிலையத்தில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிந்தும், அங்கேயே படுத்து ஓய்வெடுப்பதால் மாநகர பேருந்துகள் மற்றும் பயணிகள் சென்றுவர முடியாமல் அவதிப்பட்டு வருவதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கருக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இப்புகார்களைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் உத்தரவின்பேரில், நேற்று மாலை செங்குன்றம் மாநகர பேருந்து நிலையத்தில் மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் எஸ்.ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார்.

இந்த ஆய்வில் செங்குன்றம்-நாரவாரிக்குப்பம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத் தலைவர் விப்ரநாராயணன், செயல் அலுவலர் பாஸ்கர், தூய்மை பணி ஆய்வாளர் கருணாநிதி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வின்போது, பேருந்து நிலையத்தில் ஏராளமான மாடுகள் சுற்றி திரிவதையும், இதனால் அங்கு பயணிகள் வந்து செல்வதற்கும் பேருந்துகள் உள்ளே வந்து செல்வதற்கும் இடையூறு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்படுகிறது என்பதை மாவட்ட பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயக்குமார் கண்டறிந்தார்.

இதைத் தொடர்ந்து, மாடு உள்ளிட்ட பல்வேறு கால்நடைகளை முறையாகப் பராமரிக்காமல், சாலை மற்றும் பேருந்து நிலையத்தில் சுற்றி திரிந்தால், அவற்றை பிடித்து கோசாலையில் அடைக்கப்படும். சம்பந்தப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்படும். இதே நிலை தொடர்ந்தால், சம்பந்தப்பட்ட மாடுகளின் உரிமையாளர்கள்மீது சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவி இயக்குநர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.

பின்னர் பேருந்து நிலையத்தில் கால்நடைகள் சுற்றி திரியாதவாறு பேரூராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கண்காணித்து, அவற்றை பிடித்து அபராதம் விதிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தொடர் மழை காரணமாக, பேரூராட்சி பகுதியில் மழைநீர் தேங்காதவாறு உரிய நடவடிக்கை எடுத்து மழைநீரை அப்புறப்படுத்த வேண்டும் என்று பேரூராட்சி ஆணையரிடம் உதவி இயக்குநர் அறிவுறுத்தினார்.

The post செங்குன்றம் பேரூராட்சியில் பேருந்து நிலையத்தில் சுற்றி திரியும் மாடுகள்: மாவட்ட உதவி இயக்குநர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Sengunram Municipality ,Sengunram Municipal Transport Corporation ,Naravarikuppam Municipal Corporation ,
× RELATED நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் குப்பைகள் குறித்து விழிப்புணர்வு