×

சுற்றுலா சென்று திரும்பியபோது வேனில் மதுபாட்டில்கள் கடத்தல்

முத்துப்பேட்டை, நவ.30: முத்துப்பேட்டையில் ஆன்மீக சுற்றுப்பயணம் சென்று விட்டு ஊர் திரும்பிய வேனை சோதனை சாவடியில் போலீசார் மறித்து சோதனை செய்தபோது புதுச்சேரி மாநில மதுபாட்டில்கள் கடத்தி சென்றதால் வேன் பறிமுதல் செய்யப்பட்டது. திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் தம்பிக்கோட்டை, கீழக்காடு கிழக்கு கடற்கரை சாலையில் சோதனை சாவடியில் சப் இன்ஸ்பெக்டர் மணிமுத்து தலைமையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு குடும்பத்தினர் சென்ற வேனை வழிமறித்து சோதனை செய்தபோது அதில் மதுபான பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து வேனில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தென்காசி பகுதியைச் சேர்ந்த சுமார் 15 பேர் கொண்ட ஒரு குடும்பத்தினர் ஆன்மீக சுற்றுப்பயணமாக திருப்பதி மற்றும் புதுச்சேரி பகுதியில் உள்ள கோயில்கள் மற்றும் காரைக்கால் பகுதி கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு ஊர் திரும்பியதும், அப்போது வேனில் வந்த தென்காசி மாவட்டம், கடையநல்லூர் திருமல்லபுரம் பகுதியை சேர்ந்த செல்வராஜ் மகன் ராஜேஷ்(28) என்பவர் காரைக்காலில் புதுச்சேரி மாநில மதுபான பாட்டில்கள் வாங்கி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வேனில் மதுபானம் கடத்திய ராஜேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து அவரிடம் இருந்த 16 மதுபான பாட்டில்களையும், கடத்தலுக்கு பயன்படுத்திய டெம்போ வேனையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் போலீசார் வேனை பறிமுதல் செய்ததால் வேனில் பயணித்த குடும்பத்தினர் பேருந்தில் ஏறி ஊர் திரும்பினர்.

The post சுற்றுலா சென்று திரும்பியபோது வேனில் மதுபாட்டில்கள் கடத்தல் appeared first on Dinakaran.

Tags : Muthupet ,
× RELATED முத்துப்பேட்டை அருகே ஊராட்சி மன்ற செயலர் ஆதரவாளர்களுடன் மறியல்