×

கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூரில் 612 பயனாளிகளுக்கு பட்டா

அரியலூர், நவ.30: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில், முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 612 பயனாளிகளுக்கு பட்டாக்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று வழங்கினார்.

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்று அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா, தலைமை தாங்கினார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா, ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் கலந்து கொண்டு 612 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில அமைச்சர் சா.சி.சிவசங்கர் பேசியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய தேவைகள் உடனடியாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளும், அதே போன்று தேர்தல் வாக்குறுதிகளில் சொல்லப்படாத காலை உணவுத்திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மக்கள் தங்களது குறைகளுக்காக அலுவலர்களை தேடி செல்லும் நிலையை மாற்றி மக்களைத்தேடி அலுவலர்கள் சென்று மருத்துவம் வழங்கும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோன்று முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக இருந்தபோது அரசு அலுவலர்கள் மக்களை தேடி சென்று மனுக்களை பெற்று அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அந்த வகையில் ஏழை, எளிய மக்களின் வாழ்கைத்தரம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்திடும் வகையில் முதலமைச்சர் உத்தரவிற்கிணங்க பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த 18ம்தேதி அன்று கலைஞர் நூற்றாண்டு சிறப்பு பட்டா முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது.

அதன்மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு முதல்கட்டமாக அரியலூர் கோட்டம், அரியலூர் வட்டத்தை சேர்ந்த 215 பயனாளிகளுக்கும், உடையார்பாளையம் கோட்டம், உடையார்பாளையம் வட்டத்தைச் சேர்ந்த 193 பயனாளிகளுக்கும், செந்துறை வட்டத்தை சேர்ந்த 101 பயனாளிகளுக்கும் மற்றும் ஆண்டிமடம் வட்டத்தை சேர்ந்த 103 பயனாளிகளுக்கும் என மொத்தம் 612 பயனாளிகளுக்கு பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இதுபோன்ற திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதுடன் முதலமைச்சருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 10 பயனாளிகளுக்கு, ரூ.68,750 மதிப்பில் மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, காதொலி கருவிகளும், 6 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டையையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் இலக்குவன், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், நகர்மன்ற துணைத்தலைவர் கலியமூர்த்தி, வாலாஜாநகரம் ஊராட்சி மன்றத்தலைவர் அபிநயா இளையராஜா, திமுக நகர செயலாளர் முருகேசன், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் பாலு, ஒன்றிய திமுக செயலாளர்கள் கலியபெருமாள், அன்பழகன், மாவட்ட மதிமுக செயலாளர் ராமநாதன், ஒன்றிய மதிமுக செயலாளர் சங்கர், மாவட்ட நிலை அலுவலர்கள், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரியலூரில் 612 பயனாளிகளுக்கு பட்டா appeared first on Dinakaran.

Tags : Patta ,Ariyalur ,Ariyalur District Collector's Office Partnership ,Department of Revenue and Disaster Management ,Chief Minister ,Kissinger ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...