×

தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதால் வறண்டு போய் விட்டது நீச்சல் குளம் பயன்பாட்டிற்கு வர வேண்டும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு

பெரம்பலூர்,நவ.30: தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுது காரமாக ஒரு மாதத்திற்கும் மேலாக வறண்டு நிலையில் காட்சியளிக்கும் பெரம்பலூர் மாவட்ட நீச்சல்குளத்தை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விளையாட்டு வீரர், வீராங்கனைகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், 50 அடி நீளம் 25 அடி அகலம் கொண்ட நவீன நீச்சல்குளம் உள்ளது. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்திலேயே நவீன உடற்பயிற்சிக்கூடம், சர்வதேச தரம் வாய்ந்த சிந்தட்டிக் தரைதளம் கொண்ட டென்னிஸ் மைதானம், இறகு பந்தாட்ட உள் விளையாட்டு அரங்கம், பல் நோக்கு விளையாட்டு அரங்கம் உள்ளிட்ட விளையாட்டிற்கான பல இடங்கள் இருந்தும், பள்ளி மாணவ, மாணவிகள், சிறுவர்கள், இளைஞர்கள் அதிகம் ஆக்கிரமிப்பது நீச்சல் குளத்தைத்தான்.

காரணம் சூட்டை தணிக்கக்கூடியதாகவும், சுதந்திரமான குளியலுக்காகவும், நீந்தி திளைப்பதற்காகவும், உடற்பயிற்சிக்காகவும், நகரில் சினிமா தியேட்டர்களைத் தவிர பிரதான பொழுதுபோக்கு வசதிகள் இல்லை என்பதாலும், அலையில்லா குளத்திற்குள் ஆர்ப்பரிக்கும் இளைஞர்களின் அலை தான் அதிகரிக்கும். கட்டப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்ட நிலையில் கொரோனா தொற்றுப்பரவல் தடை காரணமாக மட்டுமே மூடப்பட்டு ஓராண்டுக்கு மேலாக பயன்பாட்டிற்கு வராமலிருந்த பெரம்பலூர் மாவட்ட நீச்சல்குளம், சீரமைப்புப் பணிகளுக்கு பிறகு இயல்பாக இயங்கி வந்தது. ஆனால் இப்போது ஒருமாதத்திற்கும் மேலாக பயன்பாடின்றி கிடப்பதால் கடல் போல் இருந்த குளம், காய்ந்து கட்டாந்தரையாக காட்சியளிக்கிறது.

5 லட்சம் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட நீச்சல் குளத்திற்கு அதே வளாகத்தில் அமைக்கப்பட்ட போர்வெல் நீரை கொண்டும், பெரம்பலூர் நகராட்சி நிர்வாகத்தின் தயவுடனும் தண்ணீரை நிரப்புவது வழக்கம். கடந்த அக்டோபர் மாதம் குளத்து நீரை சுத்திகரித்து குளோரினேசன் செய்யும் இயந்திரம் பழுதடைந்து அதனை சரிசெய்ய வழியின்றி இருப்பதால் 12 மாதங்களும் பரபரப்பாக காணப்படும் நீச்சல்குளம் பரிதாபமாக கிடக்கிறது. அதற்கு காரணம் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணிபுரிந்து வந்த சுரேஷ்குமார் என்பவருக்கு பிறகு, அடுத்ததாக யாரையும் நியமிக்காமல், அரியலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரை கூடுதல் பொறுப்பில் நியமித்த பிறகு முறையாக பராமரிக்க வழியின்றி போனது.

இதனால் வெப்பத்தின் சூட்டை தணிக்கவும், சிறுவர்களுக்கு நீச்சல் குறித்த அச்சம்போக்கவும், நீச்சல் பயிற்சி பெற்றிடவும், மாவட்ட விறையாட்டுத்துறைக்கு பயிற்சி கட்டணத்தை வசூலிக்கவும் ஏதுவாக விளங்கிய பெரம்பலூர் மாவட்ட நீச்சல்குளம் பயன்பாடின்றி பாலை வனமாக கிடக்கிறது. குறிப்பாக தேசிய அளவில் பாராலிம்பிக் போட்டியில் பதக்கங்களை வென்று வரும் பெரம்பலூர் மாவட்ட மாற்றுத்திறனாளி வீரர், வீராங்கனைகள் பயிற்சி பெற வழியின்றி திண்டாடி வந்தனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு தான் கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரான சிவா என்பவர், பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு அலுவலராக பணிமாறுதல் அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள மாவட்ட விளையாட்டு அலுவலர், விரைந்து நடவடிக்கை எடுத்து, குளோரினேசன் செய்யும் இயந்திர பழுதை சரி செய்து தண்ணீரை நிரப்பி, நீச்சல் குளத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட இளைஞர்கள், சிறுவர்கள், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளி வீரர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

The post தண்ணீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதால் வறண்டு போய் விட்டது நீச்சல் குளம் பயன்பாட்டிற்கு வர வேண்டும் பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு வீரர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Perambalur district ,Perambalur ,
× RELATED வேந்தர் சீனிவாசன் வழங்கினார்...