×

இது என்னடா விநோதமா இருக்கு… தோழிகளுக்கு மாப்பிள்ளைய பிடிக்கல… திருமணத்தை நிறுத்திய சென்னை பெண்: பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம்

அரக்கோணம்: ‘எனது தோழிகளும் மாப்பிள்ளையை பிடிக்காததால் எனக்கும் பிடிக்கவில்லை’ என்று திருமணத்தை நிறுத்திய சென்னை பெண், மகளிர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும் உறவினர் மகனான 30 வயது வாலிபருக்கும் திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்தனர்.

அதன்படி, அதேபகுதியில் உள்ள ஒரு கோயிலில் நேற்று திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளை இரு குடும்பத்தினரும் செய்து வந்தனர். இந்த சூழலில், கடந்த 27ம் தேதி கடைக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்ற மணப்பெண் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மணப்பெண்ணின் பெற்றோர் நெமிலி போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து மணப்பெண்ணை தேடி வந்தனர்.

இந்நிலையில் அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு மணப்பெண் நேற்று முன்தினம் இரவு தஞ்சம் அடைந்தார். போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், ‘எனது தோழிகள் மாப்பிள்ளை சரியில்லை எனக்கூறிவிட்டனர். இதனால் எனக்கும் மாப்பிள்ளையை பிடிக்கவில்லை. எனவே, வீட்டை வீட்டு வெளியே வந்து விட்டேன். எனது பெற்றோர் வேறொரு மாப்பிள்ளையை பார்த்தால் திருமணம் செய்து கொள்ள தயாராக உள்ளேன்’ என தெரிவித்தார்.

இதையடுத்து போலீசார், மணப்பெண்ணின் பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தியும் சுமூகமான முடிவுகள் எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து அந்த பெண் பெற்றோருடன் செல்லவும் மறுத்துவிட்டதால் வாலாஜாவில் உள்ள காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post இது என்னடா விநோதமா இருக்கு… தோழிகளுக்கு மாப்பிள்ளைய பிடிக்கல… திருமணத்தை நிறுத்திய சென்னை பெண்: பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் தஞ்சம் appeared first on Dinakaran.

Tags : ARAKONAM ,STATION ,Pitikala ,
× RELATED ஆவடி ரயில் நிலையத்தில் மேம்பாலத்தை...