×

இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்தது; பாம்பனில் ₹5 கோடி தங்கம் பறிமுதல்: அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதும் கடலில் குதித்து தப்பிய கடத்தல்காரர்கள்

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து படகில் கடத்தி வரப்பட்ட ₹5 கோடி மதிப்புள்ள 8 கிலோ தங்கத்தை திருச்சி சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவினர் கைப்பற்றினர். இலங்கையில் இருந்து ராமேஸ்வரம் அருகே பாம்பன் கடல் பகுதிக்கு தங்கக்கட்டிகள் கடத்தி கொண்டு வரப்படுவதாக திருச்சியிலுள்ள சுங்கத்துறை நுண்ணறிவுப்பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து சுங்கத்துறை அதிகாரிகள், நேற்று முன்தினம் நள்ளிரவில் பாம்பன் கடலோர பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

நேற்று அதிகாலை 3 மணியளவில் பாம்பன் சின்னப்பாலம் கடல் பகுதியில் படகு ஒன்று வேகமாக சென்றது. சந்தேகமடைந்த அதிகாரிகள் படகை நிறுத்துமாறு சிக்னல் கொடுத்து எச்சரிக்கை செய்தனர். ஆனால் படகு நிற்காமல் தொடர்ந்து கடலில் சென்று கொண்டிருந்ததால் அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மீண்டும் எச்சரிக்கை செய்தனர். இதனால் படகில் வந்தவர்கள் கடலில் குதித்து தப்பினர்.இதையடுத்து அதிகாரிகள் படகை முழுமையாக சோதனை செய்ததில் படகின் அடியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3.5 கிலோ எடையிலான தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாகா பாம்பன் சின்னப்பாலம் பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் வேறு ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4.5 கிலோ தங்கக்கட்டிகளையும் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து இன்னும் கூடுதலாக தங்கம் கடத்தி வரப்பட்டதாக தகவல் உள்ளதால், பிடிபட்ட கடத்தல் நபரிடம் நுண்ணறிவுப்பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கைப்பற்றப்பட்ட 8 கிலோ தங்கக்கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.5 கோடியாகும்.

The post இலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்தது; பாம்பனில் ₹5 கோடி தங்கம் பறிமுதல்: அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதும் கடலில் குதித்து தப்பிய கடத்தல்காரர்கள் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Pamban ,Rameswaram ,Trichy Customs Intelligence ,Dinakaran ,
× RELATED இலங்கைக்கு கடலில் நீந்த முயன்ற கர்நாடக வீரர் சாவு