×

தமிழ்நாடு ஹாட்ரிக் வெற்றி: பணிந்தது பரோடா

மும்பை: விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நடராஜன், வருண் சக்கரவர்த்தி அபார பந்துவீச்சால் தமிழ்நாடு 38 ரன் வித்தியாசத்தில் பரோடாவை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது. மும்பையில் நேற்று நடந்த இ பிரிவு லீக் ஆட்டத்தில் பரோடா அணி முதலில் பந்துவீசியது. முன்னணி வீரர்கள் சாய் சுதர்சன் 15, ஜெகதீசன் 0, சாய் கிஷோர் 8, அபராஜித் 0, விஜய் ஷங்கர் 11, இந்திரஜித் 5 ரன்னில் வெளியேற, தமிழ்நாடு 15.3 ஓவரில் 52 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், கேப்டன் தினேஷ் கார்த்திக் – ஷாருக்கான் இணைந்து 7வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி 75 ரன் சேர்த்தனர்.

ஷாருக் 31 ரன்னில் வெளியேற, தினேஷ் 68 ரன் (51 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுக்க, தமிழ்நாடு 33.3 ஓவரில் 162 ரன் எடுத்து ஆல் அவுட்டான. வருண் சக்கரவர்த்தி 5 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். பரோடா த ரப்பில் மேரிவாலா 4, ரத்வா 3, பிதியா 2, அபிமன்யூசிங் ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதைத் தொடர்ந்து, எளிய இலக்கை விரட்டிய பரோடா அணி நடராஜன், வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர் ஆகியோரின் துல்லிய தாக்குதலை சமாளிக்க முடியாமல் 23.2 ஓவரிலேயே 124 ரன்னுக்கு சுருண்டது. கேப்டன் விஷ்ணு சோலங்கி அதிகபட்சமாக 25 ரன் எடுத்தார். பார்கவ் பட் 21, ஷாஷ்வத் ராவத் 18 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர்.

தமிழ்நாடு 38 ரன் வித்தியாசத்தில் தொடர்ச்சியாக 3வது வெற்றியை வசப்படுத்தியது. தமிழ்நாடு பந்துவீச்சில் நடராஜன் 4, வருண் 3, சாய் 2 , வாரியர் ஒரு விக்கெட் எடுத்தனர். முதல் 3 லீக் ஆட்டத்தில் கோவா, பெங்கால், பரோடா அணிகளை வீழ்த்திய தமிழ்நாடு, நாளை நடைபெறும் 4வது ஆட்டத்தில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. மும்பை ஆதிக்கம்: ஆலூரில் நடந்த ஏ பிரிவு ஆட்டத்தில் களமிறங்கிய புதுச்சேரி அணி மும்பையிடம் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. முதலில் பேட் செய்த புதுச்சேரி 24.2 ஓவரில் 67 ரன்னுக்கு ஆல் அவுட்டான நிலையில், மும்பை 12.3 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 69 ரன் எடுத்து அபாரமாக வென்றது.

The post தமிழ்நாடு ஹாட்ரிக் வெற்றி: பணிந்தது பரோடா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Baroda ,Mumbai ,Natarajan ,Varun Chakraborty ,Tamil ,Nadu ,Vijay ,Hazare ,ODI ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...