×

வில்லியம்சன் அதிரடி சதம்; சரிவிலிருந்து மீண்டது நியூசி.

சில்ஹெட்: வங்கதேச அணியுடனான முதல் டெஸ்ட் போட்டியில், கேன் வில்லியம்சனின் பொறுப்பான சதத்தால் நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்துள்ளது. சில்ஹெட் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த போட்டியின் முதல் நாள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 310 ரன் குவித்திருந்த வங்கதேசம், 2வது நாளான நேற்று மேற்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் ஆல் அவுட்டானது (85.1 ஓவர்). நியூசி. தரப்பில் கிளென் பிலிப்ஸ் 4, ஜேமிசன், அஜாஸ் படேல் தலா 2, சவுத்தீ, ஈஷ் சோதி தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்கள் டாம் லாதம் 21, டெவன் கான்வே 12 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். ஹென்றி நிகோலஸ் 19 ரன்னில் வெளியேற, நியூசி. 98 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து தடுமாறியது. இந்த நிலையில், முன்னாள் கேப்டன் கேன் வில்லியம்சன் – டேரில் மிட்செல் ஜோடி பொறுப்புடன் விளையாடி 4 வது விக்கெட்டுக்கு 66 ரன் சேர்த்தது. மிட்செல் 41 ரன்னில் பெவிலியன் திரும்பினார். டாம் பிளெண்டல் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அதன் பிறகு வில்லியம்சனுடன் ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, நியூசிலாந்து கவுரவமான நிலையை எட்டியது. பிலிப்ஸ் 42 ரன் (62 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்), வில்லியம்சன் 104 ரன் (205 பந்து, 11 பவுண்டரி) விளாசி ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 6வது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. ஈஷ் சோதி டக் அவுட்டானார்.

போதிய வெளிச்சம் இல்லாததால் 2வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தபோது, நியூசி. முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்திருந்தது. கைல் ஜேமிசன் 7, கேப்டன் டிம் சவுத்தீ 1 ரன்னுடன் களத்தில் உள்ளனர். வங்கதேசம் தரப்பில் தைஜுல் இஸ்லாம் 4 விக்கெட், ஷோரிபுல், மிராஸ், நயீம், மோமினுல் தலா ஒருவிக்கெட் எடுத்தனர். நியூசி. கை வசம் 2 விக்கெட் இருக்க, இன்னும் 44 ரன் பின்தங்கிய நிலையில் இன்று 3வது நாள் சவாலை சந்திக்கிறது.

The post வில்லியம்சன் அதிரடி சதம்; சரிவிலிருந்து மீண்டது நியூசி. appeared first on Dinakaran.

Tags : Williamson ,New Zealand ,Bangladesh ,Kane Williamson ,Newsy ,Dinakaran ,
× RELATED வங்கதேசத்தில் வன்முறை: ஊரடங்கு உத்தரவு பிறப்பித்த வங்கதேச அரசு