×

இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒப்பந்தம் நீட்டிப்பு: பிசிசிஐ அறிவிப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதவிக்காலம் உலக கோப்பையுடன் முடிந்த நிலையில், அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி முன்னாள் நட்சத்திரம் டிராவிட் (50 வயது), பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமி (என்சிஏ) தலைவராகவும், இந்தியா யு-19 அணி பயிற்சியாளராகவும் இருந்தார். இந்நிலையில் 2021 நவம்பரில் இந்திய சீனியர் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். 2 ஆண்டு பதவிக்காலம் இந்த உலக கோப்பையுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

அவரது பயிற்சியின் கீழ், ஆசிய கோப்பையை வென்ற இந்திய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப், ஐசிசி ஒருநாள் உலக கோப்பைகளில் பைனல் வரை முன்னேறியது. மேலும்… டி20, ஒருநாள், டெஸ்ட் என 3 வகை கிரிக்கெட்டிலும் ஐசிசி தரவரிசையில் நம்பர் 1 அணியாகத் திகழ்கிறது. சமீபத்தில் நிறைவடைந்த ஒருநாள் உலக கோப்பையுடன் டிராவிட் பதவிக் காலம் முடிவுக்கு வந்து விட்டது. உலக கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பெற்றாலும், பைனலில் ஆஸி.யிடம் தோற்றது கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

டிராவிட் பயிற்சியாளராக தொடரக் கூடாது என்றும், அவரே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றும் எதிர்ப்பு/ஆதரவு குரல்கள் ஓங்கி ஒலித்தன. அதனால் இந்திய அணியின் ‘பார்ட் டைம்’ பயிற்சியாளராக இருக்கும் என்சிஏ தலைவர் வி.வி.எஸ்.லட்சுமணனை நிரந்தர பயிற்சியாளராாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின. அதற்கேற்ப இப்போது நடைபெற்று வரும் ஆஸி. அணிக்கு எதிரான டி20 தொடருக்கு லட்சுமணன் தான் பயிற்சியாளராக உள்ளார்.

பதவியில் நீடிக்க விருப்பம் உள்ளதா, இல்லையா என்பது குறித்து டிராவிடும் வெளிப்படையாக கருத்து தெரிவிக்கவில்லை. ‘உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்றுதான் யோசித்தோம். எதிர்காலம் குறித்து யோசிக்கவில்லை’ என்று கூறியிருந்தார். அடுத்து தென் ஆப்ரிக்காவில் சுற்றுப்பயணம் செய்ய உள்ள இந்திய அணி டிச.3ம் தேதி டர்பன் புறப்பட்டுச் செல்கிறது. அங்கு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் விளையாட இருக்கிறது.

அதற்குள் பயிற்சியாளரை நியமிக்க விரும்பிய பிசிசிஐ நிர்வாகிகள் நேற்று டிராவிட் உடன் பேசினர். அப்போது அவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தலைமை பயிற்சியாளர் டிராவிட், விக்ரம் ரத்தோர் (பேட்டிங் பயிற்சியாளர்), டி.திலீப் (ஃபீல்டிங் பயிற்சியாளர்), பராஸ் மாம்ப்ரே (பந்துவீச்சு பயிற்சியாளர்) ஆகியோரது பதவிக் காலம் நீட்டிக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று முறைப்படி அறிவித்தது.

இவர்களது பதவிக்காலம் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை என்றாலும், குறைந்தபட்சம் 2024 ஜூனில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை டி20 தொடர் வரை இவர்கள் பயிற்சியாளர்களாக செயல்பட உள்ளனர்.

The post இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஒப்பந்தம் நீட்டிப்பு: பிசிசிஐ அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : India ,Rahul Dravid ,BCCI ,Mumbai ,cricket ,World Cup ,Dinakaran ,
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...