×

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம்; அரசியல் தீர்வு எட்டவில்லை என்றால் அரசியல் சாசனப்படி முடிவெடுப்போம்: கேரள வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: ‘மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், அரசியல் தீர்வு எட்டவில்லை என்றால் அரசியல் சாசன முறைப்படி முடிவெடுப்போம்’ என்று கேரள அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடியாக அறிவித்துள்ளது. கேரள அரசால் சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டதை எதிர்த்து, கேரள அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. கேரள அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘மாநில அரசு நிறைவேற்றிய 8 மசோதாக்களில் 7 மசோதாக்களை ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக ஆளுநர் அனுப்பி உள்ளார். இவரது செயலானது இந்த வழக்கை இழுத்தடிக்கும் நோக்கில் அமைந்துள்ளது. அரசியலமைப்புக்கு எதிரானது’ என்றார்.

அப்போது தலைமை நீதிபதி நீதிபதி சந்திரசூட், ‘நிதி தொடர்பான மசோதாவில் என்ன பிரச்னை? அதற்கு ஏன் ஆளுநர் ஒப்புதல் கொடுக்கவில்லை?’ என்றார். ெதாடர்ந்து ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர், ‘இதுகுறித்து உரிய விளக்கம் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்கிறேன்’ என்றார்.

அதன்பின் கேரள அரசு தரப்பு வழக்கறிஞர், ‘மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு, ஆளுநர் ஒப்புதல் அளிப்பதற்காக ஒரு காலவரம்பை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கு இதுவே சரியான தருணமாகும். ஆளுநர்களின் செயல்பாடால் மக்கள் தான் பாதிக்கப்படுகின்றனர்’ என்றார். அப்போது குறுக்கிட்ட ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞர், ‘நிலுவையில் உள்ள மசோதாக்கள் தொடர்பாக, கேரள ஆளுநர் மற்றும் கேரள முதல்வர் ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர்’ என்றார். உடனே கேரள அரசு தரப்பு வழக்கறிஞர், ‘ஆளுநர் தனது பிம்பத்தை காப்பதற்காக நடத்தும் நாடகம்’ என்றார்.

தொடர்ந்து தலைமை நீதிபதி கூறுகையில், ‘ஆளுநர் மற்றும் முதல்வர் சந்திக்கட்டும். அவர்கள் அந்த விவகாரம் குறித்து பேசி முடிவெடுக்கட்டும். ஆனால் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு தீர்வு எட்டவில்லை என்றால் அரசியல் சாசனத்துக்குட்பட்டு புதிய வழிமுறையை நீதிமன்றம் எடுக்கும்’ எனக் கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

The post மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத விவகாரம்; அரசியல் தீர்வு எட்டவில்லை என்றால் அரசியல் சாசனப்படி முடிவெடுப்போம்: கேரள வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Kerala ,New Delhi ,Dinakaran ,
× RELATED துணை முதல்வர்கள் நியமனத்திற்கு தடை...