உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே செய்யாறு முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் பள்ளி மாணவர்களுக்கு இ சேவை மையத்தில் வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல தரைப்பாலம் கட்டிதர வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். உத்திரமேரூர் அடுத்த நெய்யாடுபாக்கம் கிராமத்தின் செய்யாற்று கரையோரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது. இங்கு ஆற்றை ஒட்டியுள்ள நெய்யாடுபாக்கம், வயலக்காவூர், உச்சிகொள்ளமேடு மற்றும் ஆற்றிற்கு எதிர் புறத்தில் உள்ள இளையனார்வேலூர், காவாந்தண்டலம், வள்ளிமேடு, சித்தாத்தூர் உள்பட பல கிராமங்களில் இருந்து 450க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் படிக்கின்றனர். இளையனார்வேலூர் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் சுமார் 80 பேர் ஆற்றை கடந்து பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.செய்யாற்றின் குறுக்கே பாலம் ஏதுமில்லாததால், தினமும் பள்ளி மாணவர்கள் ஆபத்தை எதிர்கொண்டு ஆற்றை கடந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. மழைக்காலங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வர முடியாமல் ஆவதால், அவர்களது கல்வி வீணாவது வாடிக்கையாகி விட்டது. அதையும் மீறி அவர்கள் சென்றால், உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற அச்சமும் பெற்றோர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகிறது. இந்தவேளையில், பருவமழையின் காரணமாக, தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி, காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே கனமழையின் காரணமாக செய்யாற்றில் முழுவதும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாணவ, மாணவிகளின் கல்வியினை கருத்தில் கொண்ட பள்ளி நிர்வாகம், இளையனார்வேலூர் கிராமத்தில் உள்ள வள்ளிமேடு இ சேவை மையத்தில் மாணவ, மாணவிகளை தங்க வைத்து, அங்கு ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தி வருகிறது. ஆற்றில் தண்ணீர் குறையும்போதுதான் மீண்டும் மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல இயலும் என பெற்றோர்கள் கூறுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்….
The post செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் இ சேவை மையத்தில் படிக்கும் பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.
