×

கொலு பொம்மைகளில் பாரம்பரிய நெல் விதைகள்!

நன்றி குங்குமம் தோழி

உலக அளவில் விவசாயம் பாரம்பரிய முறையில்தான் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அவையும் நஞ்சில்லா இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டன. காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பஞ்சம், அதிகரித்த மக்கள் தொகை, உணவுப் பற்றாக்குறை போன்றவற்றால் குறுகிய காலத்தில் அதிக மகசூலை தரும் பயிர்களை சாகுபடி செய்யும் வகையில், மரபணு மாற்றப்பட்ட விதைகளை பயிரிடுவதற்கு தள்ளப்பட்டனர் விவசாயிகள்.

குறிப்பாக இந்த வகை விவசாயத்தில், மரபணு மாற்று விதைகள் சீக்கிரமாக வளரும் வகையில் இயற்கை விவசாயத்துக்கு புறம்பாக ரசாயன உரங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்தியாவில் 1960-களில் ஏற்பட்ட பசுமை புரட்சிக்குப் பிறகு, இந்த விவசாய முறை இந்தியா முழுவதிலும் வெகுவாக பரவியது. அதன்பிறகு, உணவு பஞ்சத்தையே சந்திக்காத இந்தியா, கோதுமை, நெல் உள்ளிட்ட தானியங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யுமளவுக்கு விவசாயத்தில் வளர்ச்சி கண்டது. இன்றைக்கு நாம் உண்ணும் உணவுகளில், ரசாயன உரங்களின் கலப்பு இல்லாத உணவே இல்லை என்ற நிலையும் உருவாகிவிட்டது.

நஞ்சில்லா இயற்கை விவசாய முறை, பாரம்பரிய விதைகள் போன்றவை மறையத் தொடங்கின. இளம் வயதினர் கூட நீரிழிவு நோய் உட்பட பல நோய்களுக்கு ஆளாக, மீண்டும் இயற்கை விவசாயம், மற்றும் உணவுப் பழக்கவழக்கம் துளிர்விட்டன. அதில், நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோர் தமிழகத்தில் இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பரிய நெல் விதைகள் மீட்டெடுத்தல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்கவர்கள்.

இதில், நெல் ஜெயராமன் மட்டும் தனது வாழ்நாளில் 170-க்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் விதைகளை மீட்டெடுத்திருக்கிறார். இவர்களின் வழியில் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டு வருகிறார் திருநெல்வேலியைச் சேர்ந்த பெண் விவசாயி லட்சுமி தேவி. ஒவ்வொரு நவராத்திரியின் போதும், தன்னுடைய சேமிப்பில் இருக்கும் பாரம்பரிய நெல் ரகங்களை கொலு பொம்மைகளுக்குள் வைத்து காட்சிப்படுத்துவது இவரின் வழக்கம்.

‘‘பிறந்து வளர்ந்தது முக்கூடல் அருகிலுள்ள வடக்கு அரியநாயகி என்ற சிறிய கிராமம். அரசுப் பள்ளியில்தான் பள்ளிப்படிப்பை முடிச்சேன். பிறகு, மதுரை காமராஜர்
பல்கலைக்கழகத்தில் நூலகவியல் துறையில் பட்டம், அதைத்தொடர்ந்து பள்ளியில் சிறிதுகாலம் ஆசிரியர் பணி என ஆரம்பகால நாட்கள் நகர்ந்தன. பின்னர், டெலிபோன் துறையில் வேலை கிடைத்தது. அதில் 28 ஆண்டுகள் பணியாற்றினேன். அந்த சமயத்தில் எனக்கு தைராய்டு பிரச்னை ஏற்பட்டது.

உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைந்து உடல்நிலை மிகவும் பாதித்தது. அதனால் என்னுடைய வேலையை ராஜினாமா செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. என் உடல் நிலைக்கு காரணம் நான் பின்பற்றி வந்த முறையற்ற உணவுப்பழக்கம் என்று புரிந்து கொண்டேன். அதை சரி செய்ய இயற்கை விவசாயம் செய்ய முடிவு செய்தேன். என் வீட்டுப் பக்கத்தில் அரை ஏக்கர் நிலம் வாங்கி முழுமையாக விவசாயத்தில் இறங்கினேன். ஆனால் நான் வாங்கிய நிலம் ரசாயன உரத்தால் விவசாயம் செய்யப்பட்டிருந்தது.

அதனால் முதலில் அந்த நிலத்தை இயற்கை விவசாயத்துக்கு ஏற்றவாறு மாற்றினேன். அதற்கு மூன்று வருட காலமானது. ஆனாலும் கஷ்டப்பட்டுதான் அதனை முழுமையாக இயற்கை நிலமாக மாற்றினேன். நான் வயலில் வேலை செய்வதைப் பார்த்து பலரும் கிண்டல் செய்திருக்காங்க. ஆனால் நான் அதைப் பற்றி எல்லாம் கவலைப்படவில்லை. இயற்ைக முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற குறிக்கோள் மட்டும்தான் என் மனதில் இருந்தது. என் நிலத்தில் நெல் மட்டுமில்லாமல் காய்கறி, கீரை எல்லாம் விளைவித்தேன். அதைத்தான் நான் சாப்பிட்டேன். என் உடல் நிலையில் நல்ல மாற்றம் தெரிந்தது. வயலும் செழிப்பா மாறிடுச்சு. அதைப் பார்த்து என்னை கேலி செய்தவர்கள் தங்களின் தவறை உணர்ந்து பாராட்டினார்கள்’’ என்றவர் விவசாயம் பற்றி எதுவுமே தெரியாமல்தான் இதில் இறங்கியுள்ளார்.

‘‘விவசாயம் செய்ய வேண்டும். அது மட்டும்தான் என்னுடைய எண்ணமாக இருந்தது. ஆனால் அதை எப்படி செய்யணும்னு தெரியல. அதனால் நிலத்தில் சாணி உரம் மட்டும்தான் போட்டு வந்தேன். அதன் பிறகு நாட்டு மாடு வாங்கினேன். முதலில் ஒரு மாடு மட்டும்தான் இருந்தது. இப்போது எட்டு ஏக்கரில் விவசாயம் செய்வதால் நான்கு மாடுகள் வைத்திருக்கிறேன். எருக்குழி, கோமியம் பிடித்துவைக்க தனி தொட்டிகள் போன்றவற்றை அமைத்து, இயற்கை விவசாயத்துக்கான பஞ்சகவ்யம், ஜீவாமிர்தம் போன்றவற்றை வீட்டிலேயே தயார் செய்கிறேன். முதலில் 10 வருடங்கள் சாதாரண நெல் வகைகள் மட்டும்தான் பயிர் செய்தேன்.

இப்போது, கடந்த ஐந்து வருடங்களாக பாரம்பரிய நெல் ரகங்களை பயிர் செய்கிறேன். தஞ்சாவூரில்தான் பாரம்பரிய நெல் ரகத்தை வாங்கினேன். இப்போது 100 பாரம்பரிய நெல் ரகங்கள் வரை சேமித்து வைத்திருக்கிறேன். மேலும் சமூக வலைத்தளம் மூலமும் பாரம்பரிய நெல் வகைகளை சேர்த்து வருகிறேன். இந்த விஷயத்தில், என் குடும்பத்தில் உள்ள அனைவரும் எனக்கு ஆதரவு தருகிறார்கள். மேலும் பள்ளு இலக்கியத்தில் நம் நாட்டில் என்னென்ன வகையான வித்துக்கள் இருந்திருக்கின்றது என்பது பற்றி கூறப்பட்டிருக்கிறது. அதை தெரிந்து கொண்டு தேட ஆரம்பித்தேன்’’ என்றவர் பல மாநிலங்களில் இருந்தும் பாரம்பரிய நெல் ரகங்களை சேகரித்துள்ளார்.

‘‘பாரம்பரிய நெல் ரகங்கள் நம்முடைய தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கேற்ப வளரக்கூடியது. முக்கியமாக நம்மூர்ல நிலவுகிற வெப்பத்தை தாங்கி வளரும். 10 நாட்கள் வரையிலும் தண்ணீர் குறைவா கிடைத்தாலும் வாடிப்போகாது. இதுல சிறுகால பயிர்கள், நெடுங்கால பயிர்கள் என்று வகைகள் இருக்கு. சிறு வகை பயிர்கள் 85 நாட்களில் அறுவடைக்கு வந்து விடும். அதுவே நெடுங்கால பயிர்கள் 200 நாட்களுக்கு பிறகே அறுவடை செய்ய முடியும்.

இரண்டு பயிர்களையும் ஒரே நிலத்தில பயிரிடலாம் என்பதுதான் இதனுடைய தனிச்சிறப்பு. என் நிலத்தில் இருபது வகையான பாரம்பரிய நெல் வகைகளை பயிரிட்டு இருக்கேன். கருடன் சம்பா, கொத்தார சம்பா, கிச்சிலி சம்பா… இந்த மாதிரியான வித்தியாசமான பயிர் வகைகளையும் பயிர் செய்கிறேன். மேலும் பாரம்பரிய நெல் வகைகளை மக்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்றுதான் கொலு பொம்மைகளோடு பாரம்பரிய நெல் ரகங்களையும் காட்சிப்படுத்தினேன். அழிந்து போக இருக்கும் நெற்பயிர்களை காப்பாற்றி அதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதுதான் என்னுடைய நோக்கம்’’ என்கிறார் லட்சுமி.

தொகுப்பு: மா.வினோத்குமார்

The post கொலு பொம்மைகளில் பாரம்பரிய நெல் விதைகள்! appeared first on Dinakaran.

Tags : kolu ,Dinakaran ,
× RELATED வாட்டி வதைக்கும் கோடை வெப்பம்; சரும...