ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே திருப்பாலைக்குடியில் கடல் உள்வாங்கியதால் 500 படகுகள் தரை தட்டி நிற்கின்றன. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ளது திருப்பாலைக்குடி கிராமம். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இங்கு மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் சுமார் 500 படகுகளில் மீன்பிடிக்க நேற்று இரவு மீனவர்கள் கடலுக்குள் சென்றனர். இந்த சூழலில் இன்று அதிகாலை திருப்பாலைக்குடியில் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடல் உள்வாங்கியதால் கடலுக்கு சென்ற மீனவர்கள் கரைக்கு திரும்ப முடியாமல் அங்கேயே நங்கூரமிட்டு நிறுத்தி வைத்துள்ளார். இதனால் மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதுகுறித்து மீனவர்களிடம் கேட்டபோது, அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை இது வழக்கமான நடைமுறை தான். ஒவ்வொரு ஆண்டும் இவ்வாறு கடல் உள்வாங்குகிறது என்று கூறியுள்ளனர். காற்று சுழற்சி காரணமாக கடல் உள்வாங்கி இருப்பதாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். சில மணி நேரங்கள் கழித்து கடல் சரியான பிறகு மீனவர்கள் கரை திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
The post ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே 1 கி.மீ. தொலைவுக்கு உள்வாங்கிய கடல்: 500 படகுகள் தரை தட்டி நின்றன..!! appeared first on Dinakaran.