×

நெல் பயிர்களில் இயற்கை முறையிலான சூடோமோனாஸ் தெளித்தால் சூப்பர் மகசூல்

*வேளாண்துறை துணை இயக்குனர் டிப்ஸ்

நிலக்கோட்டை/ பழநி : விவசாயிகள் நெல்சாகுபடியில் இயற்கை முறையிலான சூடோமோனாஸ் பாக்டீரியாவை பயன்படுத்தி கூடுதல் மகசூல் பெறலாம் என, நிலக்கோட்டை வேளாண்துறை துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.நிலக்கோட்டை தாலுகாவின் தென்பகுதியில் செல்லும் வைகை ஆறு மற்றும் முல்லைப் பெரியாறு பாசன கால்வாயை பயன்படுத்தி சிவஞானபுரம், சித்தர்கள்நத்தம், அணைப்பட்டி, விளாம்பட்டி, மட்டப்பாறை, ராமராஜபுரம் ஆகிய பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு கோடைமழை முதல் தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை சீரான இடைவெளியில் வழக்கத்தைவிட அதிக அளவு பெய்துள்ளதால், விவசாயிகள் ஆர்வமுடன் அதிக பரப்பில் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் விவசாயிகள் நெல் உற்பத்தியில் இயற்கை முறையிலான சூடோமோனாஸ் பாக்டீரியாவை பயன்படுத்தி அதிக லாபம் பெறலாம் என நிலக்கோட்டை வேளாண்துறை துணை இயக்குனர் உமா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் என்ற வீதத்தில் கலந்து வைத்து விதைப்பதன் மூலம் குறைந்தது 30 நாட்களாவது மழைக்காலங்களில் பரவும் நோயிலிருந்து பாதுகாக்க முடியும். நாற்றுகளை நடுவதற்கு முன் சுமார் ஒரு ஏக்கருக்கு தேவையான நாற்றினை வயலில் ஒரு மூலையில் வைத்து அணைக்கட்டி அதில் சிறிதளவு தண்ணீரை தேக்கி ஒரு கிலோ சூடோமோனாஸ் கலவையை கலந்து சுமார் அரைமணிநேரம் ஊறவைத்து பின்பு நடுவதன் மூலம் அதிக தண்ணீர் மற்றும் மழையினால் ஏற்பும் இலைபுள்ளி, குலை நோயிலிருந்து பாதுகாக்க முடியும்.

பயிர்களை தொடர்ந்து நோய்களிலிருந்து பாதுகாக்க ஏக்கருக்கு ஒரு கிலோ சூடோமோனாசை 20 கிலோ மணல் அல்லது மக்கிய உரத்துடன் கலந்து தெளிக்கலாம். இதனைத் தாண்டி நோய் தாக்கினாலோ அல்லது மேற்குறிப்பிட்ட பயிர் மேலாண்மை செய்யாமல் பயிர்களை நோய் தாக்கினாலோ ஆரம்பகட்டத்திலே கண்டறிந்து ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 5 கிராம் சூடோமோனாசை கலந்து 15 நாள் இடைவேளையில் இரண்டு முறை தெளித்தால் பயிர்களை நோயிலிருந்து கண்டிப்பாக பாதுகாக்க முடியும். எக்காரணம் கொண்டும் சூடோமோனாஸ் பாக்டீரியாவை செயற்கை பூச்சிக்கொல்லி மருந்துகளுடன் கலந்து தெளிக்க கூடாது. எனவே விவசாயிகள் இயற்கை முறையிலான சூடோமோனாஸ் பாக்டீரியாவை பயன்படுத்தி நல்ல மகசூல் மற்றும் கூடுதல் லாபம் பெறலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதலை தடுப்பது எப்படி?

பழநி பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பழநி பகுதியில் விவசாயப்பணிகள் துவங்கி உள்ளன. கோ 43, திருச்சி 1, ஏ.டி.பி 39 வகை அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளன. தற்போதுள்ள காலகட்டத்தில் போதிய அளவு வெயில் இல்லாமல், வானம் மேக மூட்டத்துடனும், இரவில் கடும் குளிரும் நிலவிவருகிறது. இதன் காரணமாக நெற்பயிரில் பூச்சிநோய் தாக்குதல் ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது.

இதிலிருந்து தப்பிக்கும் வழிமுறை குறித்து வேளாண்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது கூறியதாவது:நெற்பயிரில் புகையான் நோய் தாக்குதல் அறிகுறி தென்பட்டால் தழைச்சத்தை பிரித்து குறைத்து இட வேண்டும். வயலில் தேக்கிய நீர் வற்றிய பிறகு மீண்டும் பாய்ச்ச வேண்டும். தேங்கிய நீரை வடிப்பதாக இருந்தால் வேறொரு வயலுக்குச் செல்லாமல் வடிக்க வேண்டும். இந்நோயை கட்டுப்படுத்த ஏக்கருக்கு 250 கிராம் அசிடேட் மருந்து தெளிக்க வேண்டும்.

இம்மருந்தினை மாலை நேரத்தில் தான் தெளிக்க வேண்டும். பயிரின் அடிப்பகுதியில் நன்கு படியும்படி இம்மருந்தைத் தெளிப்பது அவசியம். மருந்து தெளிக்கும் போது வயலில் தண்ணீர் தேங்கியிருக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். மேலும் கூடுதலான விபரங்களைப் பெற அருகே உள்ள வேளாண்மை அலுவலகத்தை அணுகலாம். இவ்வாறு கூறினர்.

The post நெல் பயிர்களில் இயற்கை முறையிலான சூடோமோனாஸ் தெளித்தால் சூப்பர் மகசூல் appeared first on Dinakaran.

Tags : Deputy Director ,Nilakottai ,Palani ,
× RELATED சிறுதானிய பதப்படுத்தும் மையம் அமைக்க அழைப்பு