×

பள்ளி அருகே திருமண மண்டபம் அமைக்க எதிர்ப்பு 2வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல்

*வட்டாட்சியர் சமரச பேச்சுவார்த்தை

*தியாகதுருகம் அருகே பரபரப்பு

தியாகதுருகம் : தியாகதுருகம் அருகே அரசு பள்ளிக்கு அருகே திருமண மண்டபம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 2வது நாட்களாக பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால்
பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த பல்லக்கச்சேரி கிராமத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி அமைந்துள்ளது. பல்லக்கச்சேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் உள்ள மாணவ-மாணவிகளின் நலன் கருதி இப்பள்ளிக்கு பொதுமக்கள் மற்றும் தனிநபருக்கு சொந்தமான பட்டா இடத்தை பள்ளி கல்வித்துறைக்கு வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்துவதற்கு ஊர் பொதுமக்களின் பங்கு தொகையாக ரூ.2 லட்சம் கல்வித்துறைக்கு செலுத்தப்படுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் வேளானந்தல் கிராமத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் பள்ளிக்கு அருகாமையிலேயே தனியார் திருமண மண்டபம் கட்டப்போவதாக ஒரு வருடத்துக்கு முன்பே நிலத்தை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டார். இதை அறிந்த ஊர் மக்கள் அப்போதே தடுத்து நிறுத்தியுள்ளனர். ஆனால் படிப்படியாக மண்டபம் கட்டும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.

இதையடுத்து ஊர் பொதுமக்கள் பள்ளிக்கு அருகே மண்டபம் இருந்தால் திருமண நாட்களில் பாட்டு சத்தம், சாப்பிட்ட இலையை அருகாமையிலேயே கொட்டுவதன் மூலம் துர்நாற்றம் வீசும் எனவும் அதுமட்டுமில்லாமல் சமைக்க பயன்படும் கேஸ் சிலிண்டர் போன்ற பொருட்கள் பள்ளிக்கு மிக அருகில் இருக்கக்கூடாது எனக் கூறி தியாகதுருகம் காவல் நிலையம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலங்களுக்கு ஊர் பொதுமக்களின் சார்பில் மனு கொடுத்துள்ளனர். ஆனால் அந்த மனுக்கள் மீது இந்நாள் வரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

அதனை தொடர்ந்து 2 நாட்களுக்கு முன்பு மண்டபத்துக்கு பள்ளம் தோண்ட இயந்திரம் வருவதை கண்ட பொதுமக்கள் இயந்திரத்தை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்காத காரணத்தால் பல்லக்கச்சேரி கிராமத்தை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சூளாங்குறிச்சி-தியாகதுருகம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரத்துக்கு மேலாக இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கள்ளக்குறிச்சி காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் இதற்கு ஒரு தீர்வு வரும் வரை சாலை மறியல் போராட்டத்தை கைவிட போவதில்லை என தெரிவித்ததுடன், நாளை (நேற்று) மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என்று கூறி கலைந்து சென்றனர். அதன்படி நேற்று காலை திருமண மண்டபம் பணிகள் நடைபெறும் இடத்தின் எதிரே தியாகதுருகம்-சூளாங்குறிச்சி சாலையில் மீண்டும் திரண்டு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வாணாபுரம் வட்டாட்சியர் குமரன் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் சேகர், வருவாய் ஆய்வாளர் சங்கீதா மற்றும் வருவாய்த்துறையினர் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இறுதியாக வரும் சனிக்கிழமை மண்டப தரப்பினர் மற்றும் ஊர் பொதுமக்களுடன் இதுசம்பந்தமாக அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு காண்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

The post பள்ளி அருகே திருமண மண்டபம் அமைக்க எதிர்ப்பு 2வது நாளாக பொதுமக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Vattatchiyar ,Samsara ,Thyagathurugam ,Dinakaran ,
× RELATED சம்சாரம் இல்லாமல் வாழலாம் என்பதை...