×

நீலகிரியில் கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்களை இயக்க ஆர்வம் காட்டாத அதிகாரிகள்

*பொதுமக்கள், மாணவர்கள் பாதிப்பு

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டாததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதால், பெரும்பாலான கிராமங்கள் தொலை தூரங்களில் உள்ளன. மேலும், மலைப்பாங்கான பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளன. மலை மாவட்டம் என்பதால், இங்கு தனியார் பஸ்கள் இயக்குவதற்கு போக்குவரத்து துறை அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால், கடந்த பல ஆண்டுகளாகவே இப்பகுதிகளுக்கு அரசு போக்குவரத்து கழகம் மூலம் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. ேமலும், இது லாப நோக்கில் இயக்கப்படாமல், சேவை நோக்கத்திலேயே கடந்த பல ஆண்டுகளாக அரசு பஸ்கள் அனைத்து கிராமங்களுக்கும் இயக்கப்பட்டு வந்தன.

ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கப்பட்டு வந்த பஸ்கள் ரத்து செய்யப்பட்டன. மேலும், சிறிய பஸ்களுக்கு பதிலாக சமவெளிப்பகுதிகளில் இயக்கப்படும் பெரிய பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், குறித்த நேரத்திற்கு எந்த பகுதிகளுக்குள் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களை முறையாக இயக்க அதிகாரிகள் ஆர்வம் காட்டுவதில்லை. தாங்கள் பணிகளை முடிக்க வேண்டும் என்பதற்காக கோவை உட்பட வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படும் அரசு பஸ்களை மட்டும் குறித்த நேரத்திற்கு இயக்கி தங்களது பணிகளை முடித்துக் கொள்கின்றனர். இதனால், கிராமப்புறங்களுக்கு முறையாக தற்போது பஸ்கள் இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

கடந்த சில மாதங்கள் முன்பு வரை 15 நிமிடங்களுக்கு ஒரு முறை ஊட்டியில் இருந்து குன்னூருக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கூட இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மேலும், குன்னூர் பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் தொலை தூர பஸ்களில் ஏற்றி செல்வதில்லை. கூட்டம் குறைவாக இருந்தால் மட்டுமே பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இதனால், இவ்வழித்தடத்தில் செல்லும் பயணிகள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் இது போன்ற பிரச்னைகள் அதிகமாக உள்ளது. இதனால், மாணவர்கள் அதிகமாக பாதிக்கின்றனர்.

மேலும், ஊட்டியில் இருந்து மஞ்சூர் போன்ற பகுதிகளுக்கு முறையாகவே பஸ்கள் இயக்கப்படுவதில்லை. ஊட்டியில் இருந்து மஞ்சூர் வழியாக கோவைக்கு இரு பஸ்கள் இயக்கப்படுகிறது. நேற்று முன்தினம் கோவையில் இருந்து 5.30 மணிக்கு மஞ்சூர் கீழ்குந்தாவிற்கு வர வேண்டிய பஸ் செல்லாத நிலையில், 40க்கும் மேற்பட்ட பயணிகள் கோவை புதிய பஸ் நிலையத்தில் தவித்துள்ளனர். இவர்கள், தங்களது பகுதிகளுக்கு வர மாற்று ஏற்பாடு எதுவும் போக்குவரத்து கழகம் செய்யாத நிலையில், பயணிகள் பஸ் நிலையங்களிலேயே இரவு முழுக்க காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டது. குறிப்பாக, பெண்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

அதேபோல், கிண்ணக்கொரை செல்லும் அரசு பஸ்சும் இயக்கப்படவில்ைல. சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல், இவ்வழித்தடத்தில் பயணிகளுக்கு பஸ்கள் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் பயணிகள் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். இவ்வழித்தடத்தில் மட்டுமின்றி, பெரும்பாலான கிராமப்புறங்களுக்கு முறையாக பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் அக்கறை காட்டிக்கொள்ளாத நிலையில், பல்வேறு கிராமப்புறங்களுக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதிகாரிகளிடத்தில் கேட்டால், ஒரே வார்த்தையில் டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பற்றாக்குறை என அரசின் மீது பழியை போட்டு தப்பித்து விடுகின்றனர்.

ஆனால், அதிகாரிகளின் மெத்தன போக்கில் நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு பஸ்கள் முறையாக இயக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு ஊழியர்கள் மத்தியில் உள்ளது. குறிப்பாக, கி.மீட்டர் அரசிற்கு கணக்கு காட்டுவதற்காக தொலை தூரங்களுக்கு செல்லும் பஸ்களை மட்டும் இயக்கிவிட்டு, தங்களுக்கு தேவையான இன்சென்டிவ்களை அதிகாரிகள் பெற்று கொள்கிறார்களாம்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் கிராமப்புறங்களுக்கு முறையாக பஸ்களை இயக்கவில்லை என்றால் போராட்டங்களை நடத்தவும் சில அமைப்புகள் முடிவு செய்துள்ளன. குறிப்பாக, மஞ்சூர் வழித்தடங்களில் முறையாக பஸ்கள் இயக்கவில்லை என்றால், விரைவில் இப்பகுதிகளில் உள்ள சில அமைப்புகள் போக்குவரத்து கழகத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்விஷயத்தில் தலையிட்டு கிராமப்புறங்களுக்கு முறையாக பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

The post நீலகிரியில் கிராமப்புறங்களுக்கு அரசு பஸ்களை இயக்க ஆர்வம் காட்டாத அதிகாரிகள் appeared first on Dinakaran.

Tags : Nilgiris ,Nilgiri ,Dinakaran ,
× RELATED நாவல் பழங்கள் சாப்பிடுவதற்காக தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகள்