×

வருவாய்த்துறையினர் அளவீடு செய்து ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து 1.38 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூர்,நவ.29: குறுவை பருவத்தில் தஞ்சாவூர் மாவட்டத்தில் 1.38 லட்சம் மெட்ரிக் டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி கூறியிருப்பதாவது:-
2023-24ம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம்தேதி முதல் மறு வருடம் செப்டம்பர் 30ம்தேதி வரை நெல் கொள்முதல் செய்யப்படும் காலமாகும். மத்திய அரசின் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின் கீழ் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை நடப்பு ஆண்டில் கடந்த செப்டம்பர் 1ம்தேதி முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

தற்போது குறுவை அறுவடையை முன்னிட்டு இதுவரை 296 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் செப்டம்பர் மாதம் முதல் நெல் வரத்துக்கு ஏற்றவாறு விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட கலெக்டரின் அனுமதியுடன் பரவலாக தேவையின் அடிப்படையில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. அதேபோல் ஏ கிரேடு நெல் ரகத்திற்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2,203ல் ஊக்கத்தொகை ரூ.107 கூடுதலாக வழங்கப்பட்டு ரூ.2,310ம், பொது நெல் ரகத்திற்கு ரூ.2,183ல் இருந்து ஊக்கத்தொகை ரூ.82 கூடுதலாக அளிக்கப்பட்டு ரூ.2,265 வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் விவசாயிகளின் நலன் கருதி கொள்முதல் செய்யப்படும் நெல்லிற்கு சென்ற ஆண்டு போலவே 17 சதவீதம் வரை ஈரப்பதம் தளர்வு செய்யப்பட்டும், பருவமழை மற்றும் இதர காரணங்களால் சேதம் அடைந்த முளைவிட்ட மற்றும் பூச்சி துளைத்த தானியங்கள் 5 சதவீதத்திற்கு மிகாமல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
நடப்பு பருவத்தில் விவசாயிகளின் நலன் கருதி மாவட்ட கலெக்டரின் அனுமதி பெற்று அனைத்து வருவாய் வட்டங்களிலும் நடப்பு பருவத்தில் வட்டவாரியான இடங்களில் தற்போது 34 கொள்முதல் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளது. இந்தப் பருவத்தில் இது நாள் வரை 1,38,502 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அதிகபட்சமாக பாபநாசம் வட்டத்தில் 7 கொள்முதல் நிலையத்தில் 27,547.350 மெட்ரிக் டன் நெல், தஞ்சாவூர் வட்டத்தில் 6 நெல் கொள்முதல் நிலையங்களில் 22,343 மெ.டன், திருவையாறு வட்டத்தில் ஒரு கொள்முதல் நிலையத்தில் 15,987.440, மெ.டன், பூதலூர் வட்டத்தில் ஒரு கொள்முதல் நிலையத்தில் 11,200 மெ.டன், திருவிடைமருதூர் வட்டத்தில் ஒரு கொள்முதல் நிலையத்தில் 6,588.840 மெ.டன், ஒரத்தநாடு வட்டத்தில் 16 கொள்முதல் நிலையத்தில் 50,651 மெ.டன், பட்டுக்கோட்டை வட்டத்தில் 2270.760 மெ.டன், கும்பகோணம் வட்டத்தில் 2 கொள்முதல் நிலையங்களில் 1,325.480 மெ.டன், பேராவூரணி வட்டத்தில் 588.200 மெட்ரிக் டன் என மொத்தமாக 1,38,502.960 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இதுவரை விவசாயிகள் 31,028 பேர் நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் பயனடைந்துள்ளனர். விற்பனை செய்யப்படும் நெல்லுக்குரிய தொகை ரூ.316 கோடி மின்னணு வங்கி பண பரிவர்த்தனை மூலமாக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post வருவாய்த்துறையினர் அளவீடு செய்து ஏரி, குளங்களில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகளிடம் இருந்து 1.38 லட்சம் மெ.டன் நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Revenue department ,Thanjavur ,Thanjavur district ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் மாவட்டத்தில் மின்மோட்டாரை...