×

அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு

சென்னை: அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் அம்பத்தூர் மற்றும் திருவள்ளூர் ரயில் நிலையங்களை அதிநவீனமாக மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்களை மறுவடிவமைப்பு செய்து அதிநவீன ரயில் நிலையங்களாக மாற்ற தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது. இதற்காக முதல் கட்டமாக 15 ரயில் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த திட்டத்தில் ரயில் நிலையங்களின் வளர்ச்சியிலும் உள்கட்டமைப்பை நவீனமயமாக்குவதிலும் கவனம் செலுத்தப்பட இருக்கிறது. அந்த வகையில் சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் கோட்டத்தில் அம்பத்தூர் ரயில் நிலையம் ₹21.67 கோடியிலும், திருவள்ளூர் ரயில் நிலையம் ₹28.82 கோடியிலும் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர் சென்னை புறநகர் பகுதி வணிக மற்றும் தொழில்துறைகளுக்கு மையமாக உள்ளது, மேலும் இது சென்னை சென்ட்ரல் – அரக்கோணம் இடையே ரயில் சேவையில் உள்ளதால் மக்கள் அதிகமாக ரயில்களை பயன்படுத்துவார்கள். எனவே அம்பத்தூர் ரயில் நிலையத்தை ₹21.67 கோடியில் அதிநவீனமாக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது. குறிப்பாக மேம்படுத்தப்பட்ட முகப்பு வாசல், பாதசாரிகளுக்கு வசதியாக புதிய நடைபாதை, நடைமேடை கூரை மறுசீரமைப்பு, மேம்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் நிறுத்தம், ₹8 கோடியில் 2 லிப்டுகளுடன் கூடிய புதிய 12மீ அகலம் கொண்ட நடைபாலம், புதிய சிசிடிவிகள் அமைப்பது என அனைத்து வசதிகளும் பெற்று புது பொலிவுடன் அம்பத்தூர் ரயில் நிலையம் மாற இருக்கிறது.

அதே போல, திருவள்ளூர் ரயில் நிலையத்தில், பல புறநகர் ரயில்கள் சேவை, பல எக்ஸ்பிரஸ் ரயில் சேவை அந்த வழித்தடத்தில் உள்ளது. மேலும் முக்கியமான யாத்திரை ஸ்தலமாக வீரராகவப் பெருமாள் கோயில் உள்ளது. இதனால் பொது மக்கள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். இதன் காரணமாக திருவள்ளூர் ரயில் நிலையம் ₹28.82 கோடி செலவில் அதிநவீனமாக மாற்றப்பட உள்ளது. இங்கு நடைமேடை கூரைகளை மேம்படுத்துதல்,கூடுதலாக நடைமேடை அமைத்தல், வாகனங்கள் நிறுத்தும் இடம், ₹10.13 கோடியில் 3 லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர்களுடன் கூடிய புதிய 12மீ கொண்ட நடைமேம்பாலம், மேம்படுத்தப்பட்ட தகவல் தரும் திரை, புதிய சிசிடிவிகள் அமைப்பது என பல்வேறு நடவடிக்கைகளை ரயில்வே நிர்வாகம் மேற்கொள்ள இருக்கிறது.

* அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டம், இந்திய ரயில்வே நெட்வொர்க் முழுவதும் உள்ள ரயில் நிலையங்களை மேம்படுத்துவதையும் நவீனப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டது.
* ரயில் நிலைய கட்டமைப்புகளை மேம்படுத்துதல், சுற்றியுள்ள நகரப் பகுதிகளுடன் நிலையங்களை ஒருங்கிணைத்தல், மல்டிமாடல் இணைப்பை ஊக்குவித்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகளை வழங்குதல் உள்ளிட்டவை இதில் அடங்கும்.
* அம்பத்தூர் சென்னை புறநகர் பகுதி வணிக மற்றும் தொழில்துறைகளுக்கு மையமாக உள்ளது. அம்பத்தூர் ரயில் நிலையத்தை ₹21.67 கோடியில் அதிநவீனமாக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.
* பல புறநகர் ரயில் சேவை, எக்ஸ்பிரஸ் ரயில் சேவை திருவள்ளூர் ரயில் நிலைய வழித்தடத்தில் உள்ளது. இந்த ரயில் நிலையம் ₹28.82 கோடி செலவில் அதிநவீனமாக மாற்றப்பட உள்ளது.

The post அம்ரித் பாரத் ஸ்டேஷன் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மற்றும் அம்பத்தூர் ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Ambattur ,Chennai ,Amrit Bharat Station ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்