×

புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டில் போதை பொருள் கடத்திய 7 வெளிநாட்டினர் உள்பட 602 பேர் கைது

புதுச்சேரி, நவ. 29: புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டில் மட்டும் இதுவரை 7 வெளிநாட்டினர் உள்பட 602 போதை பொருள் கடத்தல்காரர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து 201 கிலோ கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக, புதுச்சேரி சட்டம் ஒழுங்கு சீனியர் எஸ்பி நாரா சைதன்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரியில் போதை பொருள் குறிப்பாக கஞ்சா விற்பனையை தடுக்க `ஆபரேஷன் விடியல்’ என்ற திட்டம் காவல் துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. `ஆபரேஷன் விடியல்’ தொடங்கியதில் இருந்தே, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை தடுக்க, புதுச்சேரி காவல்துறை தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த 26ம் தேதி முதலியார்பேட்டை நூறடி ரோடு மேம்பாலம் அருகே கஞ்சா விற்ற 6 பேரை ேபாதை பொருள் தடுப்பு பிரிவு மற்றும் முதலியார்பேட்டை போலீசார் பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 45 கிலோ கஞ்சா, 2 கார், ஒரு பைக், 7 செல்போன் ஆகியவை கைப்பற்றப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும். கைது செய்யப்படட 6 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தப்பியோடிய அலெக்ஸ் என்பவரை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கைது செய்யப்பட்ட நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர்கள், ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் எல்லையில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து, தொழிலாளர்கள் மட்டுமின்றி இன்ஜினியரிங், மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கும் விற்று வந்துள்ளனர். குற்றவாளிகள் 7 பேரில் 5 பேர் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள், அவர்களில் 3 பேர் தமிழ்நாட்டில் குற்றவாளிகள் பட்டியலில் இருப்பவர்கள். அவர்களின் முந்தைய தொடர்பு குறித்து முழுமையாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கஞ்சாவை கடத்தி விற்றதன் மூலம் சம்பாதித்த பணம் அனைத்தையும் கைப்பற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கஞ்சா குற்றவாளிகளை பிடித்ததன் மூலமாக புதுச்சேரிக்கு கடத்தப்பட்ட கஞ்சா விநியோக சங்கிலி முறியடிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி காவல்துறையின் பிரத்யேகக் குழு, அதாவது, ‘‘போதைக்கு எதிரான அதிரடிப் படை” (ஏஎன்டிஎப்) உள்ளூர் காவல் துறையுடன் இணைந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில், குறிப்பாக சுற்றுலா தலங்களில் கடத்தல் பொருட்களின் நடமாட்டம்/ விற்பனை/ வைத்திருப்பதை தடுக்க அடிக்கடி சோதனைகளை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டில் (2022), 311 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், இதில் 6 பேர் வெளிநாட்டினர், 75 பேர் பிறமாநில குற்றவாளிகள். மொத்தம் 88 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.

நடப்பு ஆண்டில் (கடந்த 27ம் தேதி வரை), 291 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் (1 வெளிநாட்டவர், 97 பிறமாநில குற்றவாளிகள் உட்பட) கைது செய்யப்பட்டு 113 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த 2 ஆண்டில் மட்டும் இதுவரை 7 வெளிநாட்டினர் உள்பட 602 போதை பொருள் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒவ்வொரு 27 மணி நேரத்திற்கும் 1 போதைப்பொருள் கடத்தல்காரர், புதுச்சேரி காவல் துறையினரால் கைது செய்யப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆபரேஷன் விடியல் மற்றும் ஏஎன்டிஎப் உருவாக்கம் ஆகியவை புதுச்சேரியில் மேம்பட்ட அமலாக்கத்திற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. மேலும், இதுவரை 3 போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஒரு வருட காலத்திற்கு ‘போதை மருந்து மற்றும் மனநோய் பொருள்கள் சட்டத்தின்’ கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். புதுச்சேரியை பொருத்தவரை இதுவரை கஞ்சா பயிரிடப்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post புதுச்சேரியில் கடந்த 2 ஆண்டில் போதை பொருள் கடத்திய 7 வெளிநாட்டினர் உள்பட 602 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Puducherry ,
× RELATED வரும் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு : புதுச்சேரி அரசு அறிவிப்பு