×

சிறுவலூர் வன்கொடுமை சம்பவத்தில் 20 பேரை கைது செய்ய வேண்டும்

 

ஈரோடு, நவ.29:ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் சமூக நீதி மக்கள் கட்சி நிறுவன தலைவர் வடிவேல் ராமன், தமிழ்ப்புலிகள் கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் ஆகியோர் நேற்று எஸ்பி ஜவகரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டம், கோபி பொலவகாளிபாளையம் இந்திரா நகரை சேர்ந்த கல்லூரி மாணவர் நவீன் குமார் மற்றும் கிருபாகரன் மீது 20 பேர் கொண்ட கும்பல் ஜாதி வன்மத்துடன் ஆதிக்க ஜாதி வெறியர்கள் இரும்பு பைப் மற்றும் பிளாஸ்டிக் பைப்புகளால் கொலை வெறி தாக்குதல் நடத்தினர்.

இதில் மயக்கம் அடைந்த இருவர் முகத்தின் மீதும் சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்துள்ளனர். இதுகுறித்து சிறுவலூர் போலீசில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இருவர் மீதும் திட்டமிட்டு கோழி திருடியதாக பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள 20 நபர்களை விரைவில் கைது செய்ய வேண்டும்.

கல்லுாரி மாணவர் மீது நடந்த கொலை வெறி தாக்குதலை மறைக்க திட்டமிட்டு போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்துக்கு போலீஸ் பாதுகாப்பும், தமிழ்நாடு அரசு நிவாரண உதவியும் வழங்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.

The post சிறுவலூர் வன்கொடுமை சம்பவத்தில் 20 பேரை கைது செய்ய வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Siruvalur ,Erode ,Social Justice People's Party Organization ,President ,Vadivel Raman ,Tamil Tigers Party ,
× RELATED சிறுவளூர் அரசு பள்ளி ஆண்டு விழா