×

மறைமலைநகரில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 4 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா: அமைச்சர்கள் வழங்கினர்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சி மைதானத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வருவாய் மற்றும் பேரிடர் நலத்துறையின் சார்பில், பட்டா வழங்கும் விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் 4497 பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கினார். பின்னர், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது: பட்டா வழங்குவதன் மூலமாக இந்த பட்டாக்களை வைத்து அனைத்து வகையான சலுகைகளையும் பயன்படுத்திக் கொள்ளவதோடு, அனைத்திற்கும் ஆதாரமாக அமைகிறது. முதலமைச்சரின் சார்பாகவே பொது மக்களுக்கு பட்டா வழங்கப்படுகிறது.

எனவே எல்லா புகழும் முதலமைச்சரையே சாரும். அமைச்சர், எம்எல்ஏக்கள் ஆகியோரிடம் மாவட்டத்தில் மின்சாரம், பட்டா, மேய்க்கால் புறம்போக்கு என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்த.னர். அதனடிப்படையில் கோரிக்கைகள் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்றைய தினம் பட்டா வழங்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதே போன்று நமது அரசு பொதுமக்களுக்காக செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு வாழ்வில் வளம் பெற வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்,’’ என கூறினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தா.மோ.அன்பரசன் பேசுகையில்,‘செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த 2001-2011 வரை வரன்முறைபடுத்தும் திட்டத்தின் கீழ் பட்டா வழங்கப்பட்டு கிராமக்கணக்கில் மாற்றம் செய்யப்படாத நபர்களுக்கும், ஆதிதிராவிடர் நலத்துறை (மற்றும்) பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் பட்டா வழங்கப்பட்டு கிராமக் கணக்கில் மாற்றம் செய்யப்படாத நபர்களுக்கும் மற்றும் ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் தகுதியான மக்களுக்கும் தற்போது பட்டா வழங்கப்படுகிறது.

கிராமநத்தம், தோப்பு, பட்டா நிலங்கள் போன்றவைகளில் அரசால் எவ்வளவு நிலத்திற்கு பட்டா வழங்க இயலுமோ அவற்றை டிசம்பர் மாதத்திற்குள் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வாரத்திற்கு ஒருமுறை தொகுதி வாரியாக பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அடங்கல், பட்டா ஆகியவற்றை கணினியுடன் ஒப்பிட்டு பார்த்து சரி செய்து அவற்றை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,’ என்றார்.

இந்நிகழ்ச்சியில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை செயலாளர் ராஜாராமன், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏக்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அரவிந்த ரமேஷ், எஸ்.எஸ்.பாலாஜி, தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் காமராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் செம்பருத்தி துர்கேஷ், மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம், காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன், அச்சரப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கண்ணன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர்மன்ற தலைவர் கார்த்திக் தண்டபாணி, மறைமலைநகர் நகர்மன்ற துணை தலைவர் சித்ரா கமலக்கண்ணன், மறைமலைநகர் நகராட்சி 8வது நகர்மன்ற உறுப்பினர் கஸ்தூரி தசரதன், மதுராந்தகம் வருவாய் கோட்டாட்சியர் தியாகராஜன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

குன்றத்தூர்: குன்றத்தூர் சேக்கிழார் அரசுப்பள்ளி வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஏழை, எளிய மக்கள் 3008 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி, காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் தலைமையில் நேற்று நடந்தது. இதில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமங்களில் உள்ள 3008 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், டி.ஆர்.பாலு எம்பி, ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, குன்றத்தூர் நகர மன்ற தலைவர் சத்தியமூர்த்தி, குன்றத்தூர் ஒன்றிய குழு தலைவர் சரஸ்வதி மனோகரன், வடக்கு ஒன்றிய செயலாளர் வந்தேமாதரம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post மறைமலைநகரில் கலைஞர் நூற்றாண்டை முன்னிட்டு 4 ஆயிரம் பயனாளிகளுக்கு பட்டா: அமைச்சர்கள் வழங்கினர் appeared first on Dinakaran.

Tags : Artist Centenary ,Kiramalainagar ,Chengalpattu ,Chengalpattu district, Chiramalainagar ,
× RELATED நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வழக்கு மாற்றம்..!!