×

துபாயிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வந்த 7.2 கிலோ தங்கம், ₹50 லட்சம் பறிமுதல்: பெண் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 3 பேர், வாலிபர் கைது

சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வரப்பட்ட 7.2 கிலோ தங்கம், ₹50 லட்சம் மதிப்புள்ள இந்திய, வெளிநாட்டு பணம் ஆகியவற்றை டி.ஆர். ஐ. அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, பெண் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 3 பேர் மற்றும் கடத்தல் ஆசாமியான வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து பெருமளவு தங்கம் விமானங்களில் சென்னைக்கு கடத்தி கொண்டு வரப்படுவதாகவும், அந்தத் தங்கத்தை சுங்கச் சோதனை இல்லாமல், விமான நிலைய ஒப்பந்த ஊழியர்கள் சிலர் ரகசியமாக வெளியில் எடுத்து செல்வதாகவும், சென்னை தியாகராய நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறையான, டி.ஆர்.ஐ.க்கு, கடந்த ஞாயிறு இரவு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, டிஆர்ஐ தனிப்படையினர், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வெளியே தீவிரமாக கண்காணித்தனர். பயணிகளைவிட, விமான நிலைய ஒப்பந்த ஊழியர்களை தீவிரமாக கண்காணித்தனர். இதில் பெண் ஒப்பந்த ஊழியர்களும் தப்பவில்லை.

இந்நிலையில், சென்னை விமான நிலைய ஒப்பந்த ஊழியர்களான சினேகா (30), சங்கீதா (28) ஆகிய 2 பேர் மீது சந்தேகம் ஏற்படவே பணி முடிந்து வீட்டுக்கு புறப்பட்டவர்களை ரகசியமாக பின் தொடர்ந்தனர். ஒருவர் வீடு பல்லாவரத்திலும், மற்றொருவர் வீடு குரோம்பேட்டையிலும் இருந்தன. அவர்கள் வீட்டுக்கு சென்றதும், இரு குழுக்களாக அதிகாரிகள் அவர்களது வீடுகளில் அதிரடியாக சென்று சோதனை நடத்தினர். குளியலறை மற்றும் பீரோக்களில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்க உருளைகள், தங்கப் பசைகள் போன்றவைகளை கைப்பற்றினர். இருவர் வீடுகளிலும் இருந்து மொத்தம் 5.7 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது.

இதையடுத்து, இரண்டு பெண்களிடமும் அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்லும் டிரான்சிட் பயணிகள், கடத்தி வரும், தங்கத்தை ரகசியமாக, இவர்கள் வாங்கி, தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து, சுங்கச் சோதனை இல்லாமல், வீடுகளுக்கு கொண்டு வந்து விடுவார்கள். அதன்பின்பு கடத்தல் கும்பலின், ஏஜென்டுகள் வந்து, தங்கத்தை வாங்கிச் செல்வார்கள் என்று தெரிந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை இந்தப் பெண்களிடம் இருந்து தங்கத்தை வாங்கி செல்வதற்காக, ஒருவர் அவர்கள் வீடுகளுக்கு வந்தார். அவரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். இதில் அவர் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த முகமது ஹர்ஷத் (27) என்பதும், சென்னை மண்ணடியில் உள்ள விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன்(30) வீட்டில் தங்கியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அதிகாரிகள், இரு பெண்கள் உட்பட 3 பேரை கலையரசன் வீட்டிற்கு அழைத்து சென்று, சோதனை நடத்தினர்.

அங்கு 1.5 கிலோ தங்கம், இந்திய பணம் ₹45 லட்சம், அமெரிக்க டாலர் ₹5 லட்சம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இவர்தான், தங்கம் கடத்தும் ஆசாமிகளை, அந்த பெண்களுக்கு, அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதையடுத்து 2 பெண்கள் உட்பட 4 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களை சென்னை தியாகராய நகரில் உள்ள, தங்கள் அலுவலகத்துக்கு அழைத்து சென்று, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் சோதனையை தொடங்கிய அதிகாரிகள், சினிமா பாணியில் அதிரடி நடவடிக்கை எடுத்து, பல்லாவரம், குரோம்பேட்டை, மண்ணடி ஆகிய இடங்களிலும் சோதனை நடத்தி, ₹4.5 கோடி மதிப்புடைய 7.2 கிலோ தங்கம், ₹50 லட்சம் மதிப்புடைய, வெளிநாடு மற்றும் இந்திய பணம், மொத்தம் ₹5 கோடி மதிப்புடைய தங்கம், பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். மேலும், விமான நிலைய பெண் ஊழியர்கள் 2 பேர், ஆண் ஊழியர் ஒருவர், பிரபல கடத்தல் ஆசாமி ஒருவர் ஆகிய 4 பேரை, சங்கிலித் தொடர்போல் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கடத்தலில் வேறு யாருக்காவது சம்பந்தம் உண்டா? இவர்கள் இதை போல் எவ்வளவு தங்க கடத்தலுக்கு உடந்தையாக இருந்துள்ளனர்? என்று பல்வேறு கோணங்களில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். கடத்தல் ஆசாமிகளுக்கு துணை போகும் விமான நிலைய பெண் ஒப்பந்த ஊழியர்கள் கைது செய்யப்பட்டது, சென்னை விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post துபாயிலிருந்து சென்னைக்கு விமானங்களில் கடத்தி வந்த 7.2 கிலோ தங்கம், ₹50 லட்சம் பறிமுதல்: பெண் ஒப்பந்த ஊழியர்கள் உள்பட 3 பேர், வாலிபர் கைது appeared first on Dinakaran.

Tags : Dubai ,Chennai ,Dinakaran ,
× RELATED விமானம் நடுவானில் பறந்தபோது மலேசிய...