×

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் வெளிப்பிரகாரத்தில் மழைநீர் கசிவு: பக்தர்கள் அவதி

திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோயில் வெளிப்பிரகாரத்தில் மழைநீர் கசிவு ஏற்படுவதால் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். திருப்போரூர் கந்தசுவாமி கோயிலுக்கு சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக செவ்வாய், ஞாயிற்று கிழமைகளிலும், கிருத்திகை போன்ற விழா நாட்களிலும் பக்தர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கிறது.

தற்போது, கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதால் கந்தசஷ்டி, தீப உற்சவம், சபரி மலைக்கு மாலை அணிவித்தல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக தினசரி பக்தர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் அதிகரிக்கிறது. கோயிலுக்கு வரும் பக்தர்கள் மூலவரை தரிசித்து விட்டு உள்பிரகாரத்தை வலம் வருவது வழக்கம். தற்போது, அதிக அளவில் பக்தர்கள் வருகை தருவதால் நெரிசலை தவிர்க்கும் பொருட்டு உள்பிரகாரத்தை சுற்றுவதற்கு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பக்தர்கள் வெளிப்பிரகாரத்தை சுற்றி வர அனுமதிக்கப்படுகின்றனர்.

தற்போது, கடந்த சில வாரங்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக வெளிப்பிரகாரம் முழுவதும் தண்ணீர் கசிவு உள்ளது. இதுமட்டுமின்றி கோயிலில் பல இடங்களில் கிரானைட், மார்பிள், கடப்பா கற்கள் பதிக்கப்பட்டுள்ளன. ஈரத்தன்மை காரணமாக இந்த கற்களில் நடக்கும்போது பெண்களும், குழந்தைகளும் வழுக்கி விழுகின்றனர். வெயில் காலங்களில் வெளிப்பிரகாரத்தை சுற்றி வரும் பக்தர்களின் வசதிக்காக சூட்டை தணிக்கும் வகையில் வெள்ளை வண்ணம் பூசப்பட்டது. அதேபோன்று, மழைக்காலங்களிலும் தேங்காய் நாரால் ஆன மேட் போட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post திருப்போரூர் கந்தசாமி கோயிலில் வெளிப்பிரகாரத்தில் மழைநீர் கசிவு: பக்தர்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Tiruporur Kandasamy Temple ,Tiruporur ,Tiruporur Kandaswamy Temple ,Chennai ,
× RELATED திருப்போரூர் அரசுப்பள்ளி விழாவில் பாம்பு புகுந்ததால் மாணவிகள் ஓட்டம்