×

ஜனவரி 7, 8ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்க வேண்டும்: திருவள்ளூர் கலெக்டர் அழைப்பு

திருவள்ளூர்: ஜனவரி 7, 8ம் தேதி நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் உரிமையாளர்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் பிரபு சங்கர் அழைப்பு விடுத்துள்ளார். திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய நாட்களில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மாநாட்டின் கருப்பொருள் “மீள்திறனுடன், நீடித்து நிலைக்கத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி” அடைவதில் முக்கிய பங்கு வகிப்பது ஆகும். குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை உலக முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்வில் காட்சிப்படுத்துவதற்கும், அதன்மூலம் வாங்குபவர், விற்பனையாளர் மற்றும் பல்வேறு பங்குதாரர்களை இணைக்கும் தளமாக உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 அமையும்.

மேலும், முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட நிறுவனங்களுக்கு அனைத்து விதமான அனுமதிகள் மற்றும் உரிமங்கள் ஆகியவற்றை அனைத்து துறைகளிடமிருந்து விரைவாக உரியகாலத்தில் பெற்றிட ஒற்றைசாளர தகவு வழியாக பெற்றுத்தர மாவட்ட தொழில் மையம் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்.தமிழ்நாட்டில் நிலவும் தொழில்துறைக்கு உகந்த சூழல்அமைப்பு, மேம்பட்ட உள்கட்டமைப்பு, திறமை வாய்ந்த பணியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிகரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவை தொழில்துறையில் முதலீடு செய்வோர்க்கு சிறந்தவாய்ப்புகளை வழங்குகிறது.

விண்வெளிதகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ஆட்டோ மொபைல், மின்சார வாகனங்கள், ஜவுளி, தரவுபகுப்பாய்வு மற்றும் மேம்பட்ட பொருட்கள் உள்பட பல்வேறு துறைகள் அரசிடமிருந்து சிறப்பு கவனம் மற்றும் ஆதரவைப் பெற்று முதலீட்டு வாய்ப்புகளை பெற்றிட உலகமுதலீட்டாளர்கள் மாநாடு 2024 முக்கியதளமாக செயல்படும். இந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன தொழில்களில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் முதலீடுகள் ஈர்க்கும் கருத்தரங்கு இன்று (29ம் தேதி) கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கத்தில் நடைபெற உள்ளது. எனவே மாவட்டத்திற்கு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் முதலீட்டிற்கான இலக்காக ரூ.4,914 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை ரூ.5,011.48 கோடிக்கான 362 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன. எனவே, இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த ஆர்வமுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் கலந்துகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post ஜனவரி 7, 8ல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவன உரிமையாளர்கள் பங்கேற்க வேண்டும்: திருவள்ளூர் கலெக்டர் அழைப்பு appeared first on Dinakaran.

Tags : World Investors Conference ,Thiruvallur ,Dinakaran ,
× RELATED தூத்துக்குடியில் வின்பாஸ்ட் மின்சார...