×

அந்தமானில் சிக்கிய உடமைகள் விமான பயணிகள் போராட்டம்: அதிகாரிகள் சமரசம்


சென்னை: அந்தமானில் இருந்து 124 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்தது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறங்கி, தங்களுடைய உடமைகளை எடுப்பதற்காக, கன்வேயர் பெல்ட் பகுதிக்கு வந்தனர். ஆனால் நீண்ட நேரமாக பயணிகளின் உடமைகள் வரவில்லை. பின்னர், சுமார் 20 பயணிகளின் உடமைகள் மட்டும் வந்தன. அவர்களுக்கும் முழுமையான உடமைகள் வரவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பயணிகள், தனியார் விமான கவுன்டரை சூழ்ந்து கொண்டு, ‘‘நாங்கள் அந்தமானில் இருந்து வந்து விட்டோம். ஆனால் எங்கள் உடமைகள் இன்னும் வரவில்லை. எங்கள் உடமைகள் என்ன ஆனது,’’ என கேட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது விமான நிறுவன அதிகாரிகள், அந்தமானில் விமானம் புறப்படும் நேரத்தில், கடுமையான மழை பெய்து கொண்டு இருந்தது. இதனால் பயணிகளின் உடமைகளை விமானத்தில் ஏற்றுவதில் சிரமம் ஏற்பட்டது. மழை ஓய்ந்த பின்பு உடமைகளை முழுமையாக ஏற்றிய பின்பு, விமானம் புறப்படலாம் என்று காத்திருந்தால், அதற்குள் அந்தமானில் மாலை நேர தரைக்காற்று வீச தொடங்கி, மோசமான வானிலை நிலவ தொடங்கி விடும். அதன் பின்பு விமானமே புறப்பட முடியாது. எனவே தான் விமானம் அவசரமாக புறப்பட்டு வந்து விட்டது,’’ என்று கூறினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள், அப்படியானால் எங்களுடைய உடமைகள் என்ன ஆவது, அதில் விலை உயர்ந்த பொருட்கள், முக்கியமான ஆவணங்கள் எல்லாம் இருக்கின்றனவே, அது தவறிவிட்டால் நாங்கள் என்ன செய்வது என்றனர் . மேலும், விமான நிறுவன அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ‘‘இப்போதே மற்றொரு விமானம் மூலம் அந்த உடமைகளை சென்னைக்கு கொண்டு வந்து, எங்களிடம் ஒப்படைத்தால் தான், நாங்கள் விமான நிலையத்தை விட்டு வெளியில் செல்வோம், என்று உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பயணிகளை விமான நிலைய அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் அமைதிப்படுத்தினர். தனியார் விமான நிறுவன அதிகாரிகள், ‘‘இன்று அந்தமானில் இருந்து சென்னை வரும் விமானத்தில், பயணிகள் அனைவரின் உடமைகளும் பத்திரமாக சென்னைக்கு வந்துவிடும். அந்த உடமைகளை, பயணிகளின் முகவரிகளுக்கு, நாங்களே வீடு தேடிக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறோம். பயணிகளின் எந்த உடமைகளும் தவறி, சேதமடையாமல், பார்த்துக் கொள்கிறோம். அதற்கு நாங்கள் பொறுப்பு.

பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்த அசவுகரியத்திற்காக, நாங்கள் பயணிகளிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம்,’’ என்று கூறினர். இதையடுத்து பயணிகள், தங்களுடைய உடைமைகள் பற்றிய விவரங்கள், எந்த இடத்தில் டெலிவரி செய்ய வேண்டும், மற்றும் தங்களின் செல்போன் எண்கள் ஆகியவைகளையும், தனியார் விமான நிறுவன ஊழியர்களிடம் எழுதிக் கொடுத்துவிட்டு, புறப்பட்டு சென்றனர்.

The post அந்தமானில் சிக்கிய உடமைகள் விமான பயணிகள் போராட்டம்: அதிகாரிகள் சமரசம் appeared first on Dinakaran.

Tags : Andaman ,Chennai ,
× RELATED அந்தமான் கடலில் ருத்லேண்ட் தீவு அருகே...