×

எம்கேபி நகரில் 7 பேரை கடித்த நாய்க்கு வெறி நோய்க்கான அறிகுறி இல்லை: மாநகராட்சி ஆணையர் தகவல்

சென்னை: சென்னையில் 7 பேரை கடித்த நாய், தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நாய்க்கு வெறி நோய்க்கான அறிகுறி எதுவும் இல்லை, என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் வசிக்கும் மக்களை வெறிநாய்க்கடி நோய் பாதிப்பிலிருந்து காத்திடவும், வெறிநாய்க்கடி நோய் இல்லா மாநகரமாக சென்னையை உருவாக்கவும், சென்னை மாநகராட்சி, பொதுசுகாதாரத்துறை, கால்நடை மருத்துவப்பிரிவு ஆகியவற்றின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணியை நீக்க, அதற்கான மருந்தினை செலுத்தும் முகாமினை நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக, 7 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் நாய் பிடிக்கும் 5 பணியாளர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மூலம் நாள் ஒன்றிற்கு சுமார் 900 தெருநாய்களை பிடித்து, வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், மொத்தம் 121 வேலை நாட்களில் சென்னை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் சுமார் 93,000 தெருநாய்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நாய்கள் கணக்கெடுப்பு பணிகள் முடிவுறும் போது தெருநாய்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் எனத் தெரிய வருகிறது. இந்நிலையில், நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்க தடுப்பூசி செலுத்தும் முகாமினை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் நேற்று ராயபுரம் மண்டலம், வார்டு49, 50 மற்றும் 51க்கு உட்பட்ட பகுதிகளில் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ இந்த முகாம்கள் மூலம் தற்போது வரை 303 தெருநாய்களுக்கு தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணியை நீக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

வியாசர்பாடி, எம்.கே.பி. நகரில் ஒரு நாய் 7 நபர்களை கடித்த செய்தி அறிந்தவுடன், இரவோடு இரவாக அந்த நாயை, அதன் குட்டிகளுடன் பிடித்து, புளியந்தோப்பு நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட ஆய்வின் மூலம், அந்த நாய்க்கு வெறிக்கான அறிகுறி ஏதுவும் இல்லை. நாயின் குட்டிகளுக்கு எந்த பிரச்னையும் ஏற்படக் கூடாது என்பதற்காக கடித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், இந்த நாய் 10 நாட்களுக்கு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டு தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.

தொடர்ந்து, திரு.வி.க.நகர் மண்டலம், புளியந்தோப்பு நாய் இனக்கட்டுப்பாட்டு மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ள பிடிக்கப்பட்ட நாய் மற்றும் அதன் குட்டிகளையும், மேலும், இதே பகுதியில் பிடிக்கப்பட்டு கருத்தடை செய்யப்பட்டு தத்தெடுக்கப்பட்ட 2 நாய்களையும் ஆணையர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்.  மேலும், சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நாய்கள் கணக்கெடுப்பு பணியினையும், வெறிநாய்க்கடி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாமினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

The post எம்கேபி நகரில் 7 பேரை கடித்த நாய்க்கு வெறி நோய்க்கான அறிகுறி இல்லை: மாநகராட்சி ஆணையர் தகவல் appeared first on Dinakaran.

Tags : MKP ,Chennai ,Dinakaran ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்