×

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பிளாட்டினம் பசுமை சான்றிதழ் விருது: இந்திய பசுமை கட்டுமான கவுன்சில் வழங்கியது

சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இந்திய பசுமை கட்டுமான கவுன்சில் பிளாட்டினம் பசுமை சான்றிதழ் விருது வழங்கியுள்ளது. இந்திய தொழில் கூட்டமைப்பின் ஒரு பகுதியான இந்திய பசுமை கட்டுமான கவுன்சில் (ஐஜிபிசி) 2001ம் ஆண்டில் நிறுவப்பட்டது, 2025ம் ஆண்டிற்குள் நிலையான கட்டிட சூழலை உருவாக்குவதே ஐஜிபிசியின் நோக்கம். பசுமை கட்டுமான இயக்கத்தின் வளர்ச்சி காரணமாக, ஐஜிபிசி புதிய மற்றும் தற்போதுள்ள கட்டிடங்கள், உட்புறங்கள், சுகாதாரம், பள்ளிகள், தொழிற்சாலை கட்டிடங்கள், பசுமை நகரங்கள், இயற்கை காட்சிகள் மற்றும் வெகுஜன விரைவு போக்குவரத்து முறை ஆகியவற்றிற்கான பிரிவுகள் தொடங்கப்பட்டன.

இந்திய பசுமை கட்டுமான கவுன்சில், ரயில் அடிப்படையிலான வெகுஜன விரைவு போக்குவரத்து முறை (எம்ஆர்டிஎஸ்-ன்) வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் செயல்பாட்டில் பசுமை கருத்துகளை ஊக்குவிப்பதற்காக ஒரு மதிப்பீடு முறையை தொடங்கியது. இந்த மதிப்பீடு முறை, தள தேர்வு மற்றும் திட்டமிடல், நீர் திறன், எரிசக்தி திறன், பொருள் பாதுகாப்பு, உட்புற சூழல், வசதி, வடிவமைப்பு மற்றும் கட்டுமானத்தில் புதுமை ஆகியவற்றில் அவற்றின் பசுமை அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு எம்ஆர்டிஎஸ் திட்டங்களை மதிப்பீடு செய்கிறது.

இந்தியாவின் மிக உயர்ந்த பசுமை கட்டுமான திட்டமான ஐஜிபிசி சான்றிதழ் வழங்கும் நிகழ்வில், முதல் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் உள்ள 40 மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் பிளாட்டினம் மதிப்பீட்டின் மிக உயர்ந்த தரச்சான்றிதழை பெற்றுள்ளது. கடந்த நவ.25ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், சர்வதேச மற்றும் தேசிய பார்வையாளர்கள் முன்னிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சார்பாக திட்ட இயக்குநர் ஆர்ச்சுனன் இந்த விருதைப் பெற்றுக்கொண்டார்.

கடந்த நவம்பர் 20ம் தேதி லண்டனில் நடந்த விழாவில் பசுமை கட்டுமான அமைப்பிலிருந்து 2023ம் ஆண்டிற்கான “கிரீன் ஆப்பிள்” விருது தரவரிசையில் தங்கம் வென்றது. முன்னதாக, கடந்த ஏப்ரல் 24ம் தேதி அமெரிக்காவின் மியாமியில் நடந்த விழாவில் பசுமை அமைப்பிலிருந்து 2023ம் ஆண்டின் சிறந்த சுற்றுச்சூழல் நடவடிக்கைகளுக்கான பசுமை உலக விருதில் வெள்ளி வென்றது குறிப்பிடத்தக்கது.

The post சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு பிளாட்டினம் பசுமை சான்றிதழ் விருது: இந்திய பசுமை கட்டுமான கவுன்சில் வழங்கியது appeared first on Dinakaran.

Tags : Chennai ,Metro Stations ,Green Building Council of India ,Chennai Metro ,
× RELATED புலம்பெயர் தொழிலாளியை குழந்தை...