×

ஊத்தங்கரை அருகே கோயிலில் சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை திருடியதாக தாக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே கோயிலில் சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை திருடியதாக தாக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார். ஊத்தங்கரை அருகே கோயிலில் சாமி சிலைகளை திருடியதாக தாக்கப்பட்ட முதியவர் படுகாயமடைந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை அடுத்த ஊனாம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது வீட்டின் அருகே அவரது குலதெய்வ கோயிலான பெருமாள் கோயில் உள்ளது. பித்தளையால் செய்யப்பட்ட சாமி சிலைகளுக்கு சுப்பிரமணி பூஜை செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20ம் தேதி அந்த கோயிலில் இருந்த 3 சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் திருடப்பட்டது தெரியவந்தது.

அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை திருடியது ஊத்தங்கரை அருகே உள்ள சின்ன கனகம்பட்டியை சேர்ந்த சேகர் என்பவர் தெரியவந்தது. இதையடுத்து சேகரை ஊர் பொதுமக்கள் அழைத்து வந்து கம்பத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து சேகர் தான் திருடியதாக ஒப்புக்கொண்டார்.

பின்னர் திருடிய பொருட்களை தன உறவினர் ஒருவரின் வீட்டில் வைத்துள்ளதாக சேகர் தெரிவித்தார். இதையடுத்து சுப்பிரமணி தரப்பினர் சேகரை அழைத்துக்கொண்டு போச்சம்பள்ளி அருகே உள்ள கிராமத்திற்கு சென்று பூஜை பொருட்களை மீட்டனர். அப்போது சுப்பிரமணி தரப்பினர் பூஜை பொருட்களை கைப்பற்றும்போது அந்த வீட்டிலிருந்த பெண்கள் சேகரை கடுமையாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதுகுறித்து சேகரின் மகள், தனது தந்தை தான் பூஜை பொருட்களை திருடியதாகவும், அவரை சில பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கடுமையாக தாக்கியதால் தனது தந்தை உயிரிழந்ததாக சேகரின் மகள் ஊத்தங்கரை போலீசாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். கொலை வழக்கு, வன்கொடுமை வழக்கு உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

The post ஊத்தங்கரை அருகே கோயிலில் சாமி சிலைகள் மற்றும் பூஜை பொருட்களை திருடியதாக தாக்கப்பட்ட முதியவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Uthankarai ,Krishnagiri ,
× RELATED பெட்டிஷன் மேளாவில் 16 மனுக்களுக்கு தீர்வு