×

சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி, சுங்கத்துறை அதிகாரி அடிதடியால் பரபரப்பு

சென்னை: சென்னை விமான நிலையத்தில், இலங்கை பயணிக்கும், விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு அடிதடி சண்டை ஏற்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையிலிருந்து, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் சுற்றுலா பயணியாக வந்த சுமார் 30 வயதுடைய இலங்கை ஆண் பயணி மீது விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிக்கு சந்தேகம் ஏற்பட்டு, அவரை நிறுத்தி விசாரித்தார். மேலும் அந்த பயணியை, சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அவர் கையில் அணிந்திருந்த பெரிய மோதிரத்தை கழற்றிக் கொடுக்கும் படியும், மோதிரத்தை எடை போட்டு சுங்க தீர்வை போட வேண்டும் என்றும் கூறியதாக தெரிகிறது. ஆனால், அந்த பயணி மறுப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதையடுத்து சுங்க அதிகாரி, பயணி இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி, அடித்துக் கொண்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு நின்ற சக சுங்கத்துறையினர், இருவரையும் அமைதிப்படுத்தினர். ஆனாலும் இலங்கை பயணியும், சுங்கத்துறை அதிகாரியும் வாக்குவாதம் செய்துகொண்டே சென்னை விமான நிலைய காவல் நிலையத்திற்கு சென்றனர். அங்கு, இலங்கை பயணி, தன்னை சுங்க அதிகாரி தான் முதலில் அடித்தார் என்று புகார் கூறினார். அதற்கு சுங்க அதிகாரி, இவர் கடத்தல் ஆசாமி. எனவே நான், என் கடமையை செய்த போது என்னை பணி செய்ய விடாமல் தடுத்ததோடு, கைகளால் தாக்கினார் என்று புகார் செய்தார். இதேபோல், இருவரும் மாறி மாறி புகார் கூறியதால், விமான நிலைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

இந்நிலையில், இருவரும் அவர்களுக்குள் பேசினர். அப்போது இலங்கை பயணி, தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது. பிறகு சுங்க அதிகாரி, தனது புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டார்.
இதுகுறித்து சுங்கத்துறை உயர் அதிகாரிகளிடம் விசாரித்த போது, இலங்கை பயணி, சுங்கத்துறை ஏர் இன்டலிஜென்ட் துணை ஆணையரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டார். இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில், சுங்கத்துறை துணை ஆணையர் புகார் செய்தார். காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த தொடங்கியதும், அந்த பயணி சுங்கத்துறை துணை ஆணையரிடம் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டார்.

அதன் பேரில் துணை ஆணையர் புகாரை வாபஸ் பெற்றார். அதோடு இலங்கை பயணியை சுங்க அலுவலகம் அழைத்து வந்து, அவர் மோதிரம் வடிவில் கையில் போட்டிருந்த சுமார் 20 கிராம் எடையுடைய 24 காரட் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர் என கூறினார். போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சுங்கத்துறையை சேர்ந்த ஒருவரும், இலங்கையை சேர்ந்த ஒரு பயணியும், வாக்குவாதம் செய்து கொண்டு, காவல் நிலையம் வந்தனர். ஆனால் இருவருமே புகார் கொடுக்காமல், அவர்களுக்குள் சமரசமாகி திரும்பிவிட்டனர். இதனால் அந்த விவகாரத்தில் போலீஸ் மேலும் விசாரணை நடத்தவில்லை என கூறினர்.

The post சென்னை விமான நிலையத்தில் இலங்கை பயணி, சுங்கத்துறை அதிகாரி அடிதடியால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,Chennai ,Dinakaran ,
× RELATED ஓடு பாதையில் ஓடிக் கொண்டிருந்த போது...