×
Saravana Stores

எம்.கே.பி நகர் பகுதியில் ஒரே வாரத்தில் 8 பேரை கடித்த தெருநாய்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

பெரம்பூர்: சென்னையில் அதிகாலை வாக்கிங் செல்பவர்கள் முதல் இரவு தாமதமாக வீட்டிற்கு செல்பவர்கள் வரை தெருநாய் தொல்லையால் அவதிப்படுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராயபுரம் ஜி.ஏ சாலையில் பெற்றோருடன் நடந்து சென்ற பள்ளி குழந்தைகளை அங்கு இருந்த ஒரு தெருநாய் விரட்டி விரட்டி கடித்தது. இதில் 30 பேர் பாதிக்கப்பட்டனர்.

அதன்பிறகு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த நாய்க்கு ரேபிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. எனவே, அந்த நாய் கடித்ததால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5 டோஸ் தடுப்பூசி செலுத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில், நேற்று தண்டையார்பேட்டை 4வது மண்டலம் 36வது வார்டுக்கு உட்பட்ட எம்.கே.பி நகர் 16வது மேற்கு குறுக்கு தெரு மற்றும் காந்தி நகர் 5வது தெரு உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய் கடித்து 5 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த வாரத்தில் மட்டும் அப்பகுதியை சேர்ந்த 8 பேரை நாய் கடித்துள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பாபு என்பவர் கூறுகையில், ‘‘எங்களது பகுதியில் கடந்த ஒரு மாதமாகவே தெருநாய்கள் தொல்லை அதிகரித்து காணப்படுகிறது. இதுகுறித்து தண்டையார்பேட்டை மண்டல அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தால் அவர்கள் முறையாக வந்து நாய்களை பிடித்து செல்லவில்லை. மேலும் எங்களது பகுதியில் பல நாய்கள் குட்டி போட்டுள்ளதால் குட்டி போட்ட நாயை பிடிக்க மாட்டோம், என கூறுகின்றனர். இதனால் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பிரித்விராஜ் மற்றும் 75 வயது முதியவர் உள்ளிட்ட 8 பேரை நாய் கடித்துள்ளது. தினமும் இரவு நேரத்தில் 9 மணிக்கு மேல் எங்களது பகுதி வழியாக பொதுமக்கள் செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் உள்ள தெருநாய்களை பிடிக்க வேண்டும்,’’ என்றார்.

The post எம்.கே.பி நகர் பகுதியில் ஒரே வாரத்தில் 8 பேரை கடித்த தெருநாய்கள்: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : MKP Nagar ,Perambur ,Chennai ,MKB Nagar ,Dinakaran ,
× RELATED மாநகர பேருந்து மோதி ஆட்டோ நொறுங்கியது: பயணிகள் படுகாயம்