×

கொளத்தூர் காவல் மாவட்டத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு: வியாபாரிகள் பங்கேற்பு

பெரம்பூர்: கொளத்தூர் காவல் மாவட்டம் சார்பில் போதை பொருட்களுக்கு எதிராக வியாபாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. கொளத்தூர் துணை கமிஷனர் சக்திவேல் தலைமை வகித்தார். உதவி கமிஷனர்கள் சிவக்குமார், ராகவேந்திரா ரவி, இன்ஸ்பெக்டர்கள் மூர்த்தி, ஐயப்பன், பிரபு, ராஜேஸ்வரி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இதில் குட்கா பொருட்களை விற்பனை செய்தால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு பொருளை சந்தையில் விற்கும்போது அதனால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் பின் விளைவுகள் குறித்தும் வியாபாரிகளுக்கு தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.

இதேபோன்று கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கோபி உத்தரவின் பேரில் அயனாவரத்தில் நேற்று அயனாவரம் உதவி கமிஷனர் முத்துக்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்ட போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர்கள் பரணிநாதன், சுதாகர் உள்ளிட்ட ஏராளமான போலீசார் கலந்து கொண்டனர்.

இதில் கலந்துகொண்ட வியாபாரிகளிடம் பேசிய உதவி கமிஷனர் முத்துக்குமார் கூறுகையில் ஒவ்வொரு பெட்டிக்கடை முன்பும் இங்கு குட்கா விற்கப்படாது என்ற பெயர் பலகை வைக்க வேண்டும். அதனை மீறி அப்பகுதியில் விற்பனை செய்தால் கண்டிப்பாக அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும். மேலும் குட்கா விற்பனையில் ஈடுபடும் வியாபாரிகளின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு தொடர்ந்து குட்கா விற்பனையில் ஈடுபட்டால் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும் என எச்சரிக்கை விடுத்தார்.

The post கொளத்தூர் காவல் மாவட்டத்தில் போதைப்பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு: வியாபாரிகள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Kolathur police district ,Perampur ,Kolathur ,District ,Dinakaran ,
× RELATED பெரம்பூர், கொளத்தூர் பகுதிகளில்...