×

மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்த வேண்டும்: வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்த வேண்டும் என சென்னையில் நடந்த வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி.பி.சிங் முழுஉருவ சிலையை திறந்து வைத்து, சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 150 ஆண்டு பழமைவாய்ந்த மாநில கல்லூரி வளாகத்தில், வி.பி.சிங்கின் அருமை நண்பர், கலைஞர் நீடுதுயில் கொண்டிருக்கின்ற கடற்கரை சாலையில் சமூகநீதியின் சின்னமாம் வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. எங்களுடைய அழைப்பை ஏற்று, இங்கு வந்துள்ள வி.பி.சிங் மனைவி சீதா குமாரிக்கும், அவருடைய மகன் அஜயா சிங்க்கும் உங்களுடைய அனைவரின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வி.பி.சிங் சிலை வைப்பது மூலமாக அவருடைய புகழ் உயருகிறது என்று பொருள் இல்லை; நாம் அவருக்கு காட்ட வேண்டிய நன்றியை காட்டி இருக்கிறோம்.

காலம் காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்கு சமூகநீதி கதவை திறந்து வைத்தவர் வி.பி.சிங். தன்னுடைய பிரதமர் பதவி போனாலும் பரவாயில்லை என்று அதில் உறுதியாக இருந்தவர் வி.பி.சிங். அவர் பிறப்பால் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் அல்ல. ஏன், ஏழை எளிய குடும்பத்தை சேர்ந்தவரும் அல்ல. ஆனாலும் ஏழை – எளிய, பிற்படுத்தப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களுக்காக இடஒதுக்கீட்டை சாத்தியப்படுத்தி காட்டியவர். அப்போது நாடாளுமன்றத்தில் பெரியார், அம்பேத்கர், ராம் மனோகர் லோகியா ஆகிய மூவருடைய பெயரைத்தான் வி.பி.சிங் குறிப்பிட்டார். பெரியாருக்கு தனிப்பட்ட நன்றியை நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.

பதவியில் இருந்த பதினோரு மாத காலத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு தொடக்கப்புள்ளி, தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்திற்கு தொடக்கப்புள்ளி, வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை உருவாக்கியது, லோக்பால் சட்டத்துக்கு தொடக்க முயற்சிகள், தேர்தல் சீர்திருத்தங்கள், அம்பேத்கருக்கு பாரத ரத்னா விருது, நாடாளுமன்றத்தின் நடுவே அம்பேத்கர் படம், மாநிலங்களுக்கு இடையிலான கவுன்சில், உழவர்கள் பிரச்னையை தீர்க்க மூன்று குழுக்கள், டெல்லி குடிசைப்பகுதி மக்களுக்கு வாழ்விடங்கள், அதிகபட்ச சில்லறை விற்பனை விலை அச்சிட உத்தரவு, நுகர்வோர் பாதுகாப்பு – இன்னும் பட்டியல் நிறைய இருக்கிறது.

சமூகநீதியின் காவலரான வி.பி.சிங்குக்கு சிலை வைத்ததன் மூலமாக தமிழ்நாடு அரசு இன்றைக்கு பெருமை அடைகிறது. சமூகநீதி பயணத்தில் நாம் செல்ல வேண்டிய தூரம் மிக அதிகம். சமூகநீதி என்பது ஒரு மாநிலத்தின் பிரச்னை இல்லை; எல்லா மாநிலங்களின் பிரச்னை. ஒவ்வொரு மாநிலத்துக்கும் சாதி – வகுப்பு அளவீடுகள் வேறுபடலாம். ஆனால் பிரச்னை ஒன்றுதான். அதுதான், புறக்கணிப்பு. எங்கெல்லாம் புறக்கணிப்பு – ஒதுக்குதல் – தீண்டாமை – அடிமைத்தனம் – அநீதி இருக்கிறதோ, அங்கெல்லாம் அதை முறிக்கின்ற மருந்தாக இருப்பதுதான் சமூகநீதி.

தாமதப்படுத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்போடு சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்த வேண்டும். பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு முழுமையாக முறையாக வழங்கப்பட வேண்டும். பட்டியலின – பழங்குடியின மக்களுடைய இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். சிறுபான்மையினர் இடஒதுக்கீடும் முறையாக வழங்கப்பட வேண்டும். இதையெல்லாம் அகில இந்திய ரீதியில் கண்காணித்து, உறுதி செய்ய அனைத்து கட்சி எம்.பிக்கள் கொண்ட குழு அமைக்கப்பட வேண்டும்.

இதனையெல்லாம் அகில இந்திய அளவில் சமூகநீதியில் ஆர்வம் கொண்ட அனைத்து அரசியல் இயக்கங்களும் ஒற்றுமையாக இணைந்து மக்கள் நலனுக்காகச் செயல்படவேண்டும். சமூகநீதி காவலர் வி.பி.சிங் சிலை திறப்பு நாளில் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டிய உறுதிமொழி; “இந்தியா முழுமைக்கும் வாழும் பிற்படுத்தப்பட்ட – பட்டியலின – பழங்குடியின – சிறுபான்மை – விளிம்பு நிலை மக்களுடைய உயர்வுக்கான ‘அரசியல் செயல்திட்டங்கள்’ ‘அரசின் செயல்திட்டங்களாக’ மாற்றி அமைக்க இன்றைக்கு உறுதி ஏற்போம். ‘வி.பி.சிங் மறையலாம். அவர் ஏற்றி வைத்த சமூகநீதி தீபம் அணையாது. அவரை யார் மறந்தாலும், தமிழ்நாடு மறக்காது. திராவிட மாடல் அரசு மறக்காது.
இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், வி.பி.சிங் குடும்பத்தினர், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, மு.பெ.சாமிநாதன் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மதிமுக பொதுச்செயலாளர் வை.கோ, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

* ஒன்றிய அரசு துறை செயலர்களில் 89 பேரில் 85 பேர் உயர் சாதியினர்
பல்கலைக்கழக மானியக்குழு இணை இயக்குநர் பதவிக்கு இடஒதுக்கீடே கிடையாது. ஒன்றிய அரசின் துறை செயலாளர்கள் 89 பேரில் 85 பேர் உயர்சாதியினர். கூடுதல் செயலாளர்கள் 93 பேரில், 82 பேர் உயர்சாதியினர். பிற்படுத்தப்பட்டவர் கிடையாது. ஒன்றிய அரசு துறைகளின் இணை செயலாளர்கள் 275 பெயரில், 19 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்கள். அசாம், உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், ஜார்கண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் இருக்கின்ற மத்திய சட்டப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கையில் இந்த ஆண்டு வரை இடஒதுக்கீடே இல்லாத நிலைதான் நீடிக்கிறது. 45 மத்திய பல்கலைக்கழகங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பேராசிரியர்கள் 4 விழுக்காடு மட்டும்தான். இப்படித்தான் பல்வேறு துறைகளில் இன்றைக்கும் நிலைமை இருக்கிறது.

சரி, நீதிமன்றங்களில் சமூகநீதியின் நிலை என்ன? 2018 முதல் 2023 வரை நாடு முழுவதும் உயர் நீதிமன்றங்களில் நியமிக்கப்பட்ட 604 நீதிபதிகளில், 72 பேர் மட்டும்தான் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள். ஆனால், 458 பேர் பொதுப்பிரிவை சேர்ந்தவர்கள். உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு முறை அமல்படுத்தப்படவில்லை. ஏன், அரசு துறைகளின் பதவி உயர்வுகளின் போது இடஒதுக்கீடு முறை நடைமுறைப்படுத்தபடவில்லை. இந்த நிலையை எல்லாம் மாற்றுவதற்குதான் நாம் தொடர்ந்து உழைக்க வேண்டும். என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

* பிறப்பில் பாகுபாடு பார்த்தால் எப்படி அங்கு நடுநிலை இருக்கும்: வி.பி.சிங் மகன் அஜயா சிங் பேச்சு
வி.பி.சிங் மகன் அஜயா சிங் பேசியதாவது: இந்த நாள் எனக்கு சிறந்த நாள், என் இதயத்தில் இருந்து நன்றி கூறுகிறேன். இங்கு என்ன சொல்லுவது என்று தெரியவில்லை. அதனால் என் மகள் 1995 அல்லது 1996ல் என் தந்தை ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் இருந்த போது உருவாக்கிய பேச்சை என்னிடம் அளித்தார். அதனை இங்கே பகிர வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இந்த பேச்சுக்கு பிறகு 4 மாதத்தில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், ‘இந்தியாவில் சமூகம் மற்றும் அரசியல்’ என்ற பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது. மிக நீளமான அப் பேச்சை சுருக்கி கூறுகிறேன்.

ஜனநாயகம் என்பது வெறும் வாக்குச் சீட்டு மட்டும் அல்ல, அது அரசாங்கத்தில் உள்ள மனிதனின் மாண்பு. ஒருவரின் கால் மற்றொருவரின் தலை மீது இருந்தால் அது எப்படி ஜனநாயகம் ஆகும். ஒருவனை பிறப்பால் பாகுபாடு பார்த்தால் எப்படி அங்கு நடுநிலை இருக்கும். இதை எல்லாம் ஒழிக்க வேண்டும் என்றால் அரசு மட்டும் போதாது, இட ஒதுக்கீடு போன்றவையே இதை ஒழிக்க உதவியாக இருக்கும் என்று அவர் கூறினார். என் தந்தைக்கு இத்தகைய மரியாதை அளித்ததற்கு மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடைய குடும்பம் நீங்கள் செய்ததை எப்போதும் மறக்காது.

The post மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் ஒன்றிய அரசு நடத்த வேண்டும்: வி.பி.சிங் சிலை திறப்பு விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Union government ,Tamil Nadu ,Chief Minister ,M.K.Stal ,VP Singh ,Chennai ,M. K. Stalin ,
× RELATED “இதுவரை தமிழக அரசு கேட்ட நிதியை ஒன்றிய...