×

தெலங்கானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது: தலைவர்கள் இறுதி கட்ட வாக்குசேகரிப்பு

திருமலை: தெலங்கானாவில் இன்றுடன் பிரசாரம் முடிய உள்ள நிலையில் தலைவர்கள் கடைசி கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தெலங்கானாவில் வரும் 30ம்தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 119 தொகுதிகளிலும் நடந்து வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவு பெறுகிறது. அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் இறுதி கட்ட பிரசாரம் செய்து வாக்கு சேகரித்து வருகின்றனர். பாஜக, காங்கிரஸ், பிஆர்எஸ் ஆகிய கட்சிகளின் முன்னணி தலைவர்கள் பொதுக்கூட்டங்கள், ரோட்ஷோ, முக்கிய சந்திப்புகளில் கூட்டம் என போட்டி போட்டு கொண்டு பிரசாரம் செய்து வருகின்றனர்.

பிஆர்எஸ் கட்சியின் தலைவரும், அம்மாநில முதல்வருமான சந்திரசேகரராவ், அமைச்சர்கள் கேடிஆர், ஹரிஷ்ராவ் உள்ளிட்டோர் சூறாவளி பிரசாரம் செய்கின்றனர். முதல்வர் சந்திரசேகரராவ், சுல்தானாபாத், வெல்கத்தூர், சென்னூர் மற்றும் ஐதராபாத் ஆகிய இடங்களில் ‘ரோட் ஷோ’வும் ஹுசூராபாத், எத்துருநகரம், அம்பர்பேட்டை மற்றும் முஷிராபாத் ஆகிய இடங்களில் பிரசாரமும் செய்தார். காங்கிரஸ் சார்பில் கார்கே, ராகுல், பிரியங்கா, டிகே சிவக்குமார், சித்தராமையா, ரேவந்த்ரெட்டி ஆகியோர் இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

இதில் பிரியங்கா நேற்று புவனகிரி, கட்வாலா, கோடங்கல் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். மாநில தலைவர் ரேவந்த் நேற்று இல்லந்து, டோர்னக்கல், கோடங்கல் ஆகிய இடங்களில் நடந்த கூட்டங்களில் பங்கேற்றார். பாஜ சார்பில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா மற்றும் யோகி ஆதித்யநாத், பவன் கல்யாண், கிஷன்ரெட்டி ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தெலங்கானாவில் பிரதமர் மோடி 3 நாள் பிரசாரத்தை முடித்துவிட்டு நேற்று இரவு டெல்லிக்கு திரும்பினார்.

The post தெலங்கானாவில் இன்று பிரசாரம் ஓய்கிறது: தலைவர்கள் இறுதி கட்ட வாக்குசேகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Telangana ,Tirumala ,Telangana… ,Dinakaran ,
× RELATED அடுத்தடுத்து நடந்த விபத்துகளில்...