×

கோயில் சிலைகளை திருடிய முதியவர் அடித்துக்கொலை: டிரான்ஸ்பார்மரில் கட்டி வைத்து தாக்கிய 7 பேர் மீது வன்கொடுமை வழக்கு

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே, கோயிலில் கொள்ளை அடித்த முதியவரை டிரான்ஸ்பார்மரில் கட்டி வைத்து அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த ஊனாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (43). இவரது வீட்டின் அருகே, குலதெய்வமான பெருமாள் கோயில் உள்ளது. இங்கு அரை அடி உயரமுள்ள பித்தளையாலான பெருமாள், சிவன், லட்சுமி சிலைகளை வைத்து பூஜை செய்து வருகின்றனர். கடந்த 20ம் தேதி, கோயிலில் இருந்த 3 சிலைகள் மற்றும் பூஜை பொருட்கள் திருடு போனது.

இதுதொடர்பாக ஊத்தங்கரை அருகே சின்னகணக்கம்பட்டியைச் சேர்ந்த சொட்ட சேகர் (70) என்பவரை சுப்ரமணி மற்றும் அவரது உறவினர்கள் டிரான்ஸ்பார்மரில் கட்டி வைத்து அடித்து விசாரித்தனர். அப்போது, கோயிலில் சிலை மற்றும் பூஜை பொருட்களை திருடியதை அவர் ஒப்புக்கொண்டார். பின்னர், திருடிய பொருட்களை புளியாண்டப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டில் ஒளித்து வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனையடுத்து, நேற்று முன்தினம், சுப்ரமணி தரப்பினர் சொட்ட சேகரை புளியாண்டப்பட்டிக்கு அழைத்துச் சென்று, அவர் அடையாளம் காட்டிய வீட்டில் இருந்த திருடப்பட்ட பொருட்களை மீட்டனர். பின்னர், சொட்ட சேகரை சின்னகணக்கம்பட்டியில் உள்ள அவரது வீட்டில் விட்டுச் சென்றனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில், சொட்ட சேகர் தனது வீட்டில் காயங்களுடன் இறந்து கிடந்தார். இதுகுறித்து அவரது மகள் போலீசில் புகார் அளித்தார். அதில், என்னுடைய தந்தையை முதுகு, நெஞ்சு, வயிறு ஆகிய பகுதிகளில், கட்டைகளாலும், கைகளாலும் சரமாரியாக அடித்தனர். அவர்களை தடுக்க முயன்ற என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதோடு, கன்னத்திலும், வயிற்றிலும் ஆவேசமாக தாக்கினர். என் கண் முன்னே, எனது தந்தையை அடித்து கொலை செய்து விட்டனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறி இருந்தார்.

இதன் பேரில், போலீசார் சுப்ரமணி உள்ளிட்ட 7 பேர் மீது, சட்டவிரோதமாக கூட்டம் கூடுவது, வழிமறித்தல், கையால் அடித்தல், பெண்களை மானபங்கப்படுத்துவது, கொலை வழக்கு, வன்கொடுமை செய்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலையான சொட்ட சேகர் மீது, மத்தூர் போலீசில் ஒரு வழக்கும், ஊத்தங்கரை போலீசில் 14 வழக்குகளும் என மொத்தம் 15 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சொட்ட சேகரை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி, அவரது உறவினர்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களிடம் டிஎஸ்பி பார்த்திபன் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதனை ஏற்று, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதற்கிடையே சொட்ட சேகரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

The post கோயில் சிலைகளை திருடிய முதியவர் அடித்துக்கொலை: டிரான்ஸ்பார்மரில் கட்டி வைத்து தாக்கிய 7 பேர் மீது வன்கொடுமை வழக்கு appeared first on Dinakaran.

Tags : Uthangarai ,
× RELATED வாகனம் மோதி வாலிபர் பலி