×

செங்குன்றம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

புழல்: செங்குன்றம் பேருந்து நிலையத்தில், அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பழமையான செங்குன்றம் பேருந்து நிலையம் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை பாரிமுனை, தாம்பரம், தங்கசாலை, திருவொற்றியூர், கோயம்பேடு, அம்பத்தூர் எஸ்டேட், ஆவடி, பூந்தமல்லி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பழவேற்காடு, பொன்னேரி உள்பட பல்வேறு பகுதிகளுக்கு சுமார் 100க்கும் மேற்பட்ட மாநகரப் பேருந்துகள் சென்று வருகின்றன.

இந்த பேருந்துகளில் கிரான்ட் லைன், தண்டல் கழனி, வடகரை, அழிஞ்சிவாக்கம், வடபெரும்பாக்கம், விளாங்காடு பாக்கம், சென்றம்பாக்கம், புள்ளிலைன், தீர்த்தங்கரையம்பட்டு, பாடியநல்லூர், நல்லூர், சோழவரம், கும்மனூர், ஆங்காடு, அலமாதி, பொத்தூர், பம்மது குளம் உள்பட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்னையில் உள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர். இப்படிப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் நிழற்குடைகள் இல்லை. பயணிகள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள், தொழிலாளர்கள் அமர்ந்து செல்வதற்கு இருக்கைகள் இல்லை. இதனால் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மேலும் இந்த பேருந்து நிலையத்தில் மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தி வைப்பதால் மாநகரப் பேருந்துகள் திரும்புவதற்கு பெரிதும் சிரமமாக உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழக அரசு உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர்வதற்கு இருக்கைகள் மற்றும் நிழற்குடை அமைத்து தரவும், பேருந்து நிலைய வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கவும், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தாத அளவுக்கு ஏற்பாடு செய்யவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள், மாநகர பேருந்து ஓட்டுநர்கள் கூறுகையில், இந்தப் பேருந்து நிலையத்தில் செங்குன்றம் போலீசார் ரோந்து பணியில் சென்று வர வேண்டும். அப்படி வந்தால் இரண்டு சக்கர வாகனங்களை யாரும் நிறுத்த மாட்டார்கள். போலீசார் சுழற்சி முறையில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும். இந்தப் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதி இல்லை.

அதிக கட்டணம் கொடுத்து அருகில் உள்ள கடைகளில் குடிநீர் வாங்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. எனவே இங்கு பாதுகாப்பான குடிநீர் மையத்தை அமைத்து நாரவாரிக்குப்பம் பேரூராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போதுமான மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரங்களில் வழிப்பறி, பாலியல் தொல்லைகள் அடிக்கடி நடக்கிறது. எனவே கூடுதலாக மின்விளக்குகளை அமைத்து தர வேண்டும் என்றனர்.

The post செங்குன்றம் பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்: சமூக ஆர்வலர்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Sengunram ,Puzhal ,Sengunram bus station ,Sengkunram bus station ,Dinakaran ,
× RELATED செங்குன்றம் பகுதியில் பழுதடைந்த...