×

2024-25ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பின் பாடப்பிரிவுகளில் உச்ச வரம்பு நீக்க ஏஐசிடிஇ புதிய திட்டம்: ஒரு கல்லூரியில் முதன்மை பாடப்பிரிவில் (கோர் பிரான்ச்) குறைந்தது மூன்று படிப்புகள் இருக்க வேண்டும்

சென்னை: போதிய உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள பொறியியல் கல்லூரிகளில், 2024-25ம் கல்வியாண்டு முதல் ஒவ்வொரு பாட பிரிவுகளிலும் உள்ள இடங்களுக்கான உச்ச வரம்பை நீக்குவதாக ஏ.ஐ.சி.டி.இ ஒரு திட்டத்தை கொண்டு வந்துள்ளது. பொறியியல் கல்லூரிகளில் ஒரு பாடப்பிரிவில் அதிகபட்சம் 240 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். ஏனெனில் தொழில்துறை எதிர்பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கையும், படித்து முடித்து விட்டு வெளியே வரும் பட்டதாரிகளின் எண்ணிக்கையும் முரண்பாடாக இருந்து வந்தது. இது வேலைவாய்ப்பில் ஆரோக்கியமற்ற சூழலை உருவாக்கும் எனக் கருதி உச்ச வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது.

எனவே ஒரு பாடப்பிரிவில் 240 மாணவர்களுக்கு மேல் சேர்த்து கொள்ளப்படுவது இல்லை. சீட் நிரம்பி விட்டது என்று கூறி வேறு பாடப்பிரிவை தேர்ந்தெடுக்க அறிவுறுத்தப்படுகின்றனர். இத்தகைய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அனைத்திந்திய தொழிற்கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ) ஒரு விஷயத்தை பரிந்துரை செய்துள்ளது. அதாவது, 2024-25ம் கல்வியாண்டு முதல் ஒரு பாடப்பிரிவில் சேர பொறியியல் மாணவர்களுக்கு உச்ச வரம்பு நீக்கப்படும் எனத் தெரிகிறது. அப்படியெனில் ஒரு பாடப்பிரிவில் எத்தனை மாணவர்கள் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம்.

அதேசமயம் சம்பந்தப்பட்ட கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், ஆய்வகங்கள் ஆகியவை இருக்க வேண்டும். இவை அனைத்தும் வல்லுநர்கள் குழு மூலம் நேரில் ஆய்வு செய்யப்படும். அதுமட்டுமின்றி ஒரு கல்லூரியில் முதன்மை பாடப்பிரிவில் (கோர் பிரான்ச்) குறைந்தது மூன்று படிப்புகள் இருக்க வேண்டும். இதன் அடிப்படையில் தான் கல்லூரிகளுக்கு ஒரு பாடப்பிரிவில் கூடுதல் மாணவர்கள் சேர்த்து கொள்ள அனுமதிக்கப்படுவர். ஏஐசிடிஇ-ன் நடவடிக்கை முன்னணி பொறியியல் கல்லூரிகளுக்கு வரப்பிரசாதமாக இருக்கும்.

ஏனெனில் அவர்களிடம் உயர்தர உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், டிஜிட்டல் வசதிகள் உள்ளிட்டவை இருக்கும். அவர்கள் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் கூடுதல் மாணவர்களை சேர்த்து கொள்ளலாம். அதுவே சிறிய மற்றும் நடுத்தர பொறியியல் கல்லூரிகளில் வாய்ப்புகள் இல்லை. இதற்கு எதிராக பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. நல்ல வேலைவாய்ப்பு இருக்கும் பாடப்பிரிவில் மாணவர்கள் அதிக அளவில் சேர்ந்து படிக்க வாய்ப்பு ஏற்படும். இருப்பினும் ஏராளமான மாணவர்கள் படிக்கும்போது தரமான கல்வி வழங்குவது கேள்விக்குறியாகி விடும் என்கின்றனர்.

The post 2024-25ம் கல்வியாண்டு முதல் பொறியியல் படிப்பின் பாடப்பிரிவுகளில் உச்ச வரம்பு நீக்க ஏஐசிடிஇ புதிய திட்டம்: ஒரு கல்லூரியில் முதன்மை பாடப்பிரிவில் (கோர் பிரான்ச்) குறைந்தது மூன்று படிப்புகள் இருக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : AICTE ,CHENNAI ,
× RELATED பிபிஏ, பிஎம்எஸ், பிசிஏ படிப்புகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 7 வரை அவகாசம்