×

தண்ணீர் நிரம்பி அருவிபோல் கொட்டுவதால் சுற்றுலா தலமாக மாறிய தையூர் ஏரி

திருப்போரூர்: தொடர் மழையால், தையூர் ஏரியில் தண்ணீர் நிரம்பி வழிந்து அருவிபோல் கொட்டி வருகிறது. இதனை, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அதனை கண்டு ரசிதது வருகின்றனர். இதனால், பார்ப்பதற்கு அப்பகுதி சுற்றுலா தலம்போல் காட்சியளிக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பெரிய ஏரிகளான மதுராந்தகம், பொன் விளைந்த களத்தூர் ஆகிய ஏரிகளுக்கு அடுத்து தையூர் ஏரி மூன்றாவது பெரிய ஏரியாக விளங்குகிறது.

இந்த ஏரி, சுமார் 2 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களுக்கு முக்கிய நீர்ப்பாசன மையமாகவும், தையூர், கேளம்பாக்கம், புதுப்பாக்கம், உள்ளிட்ட சுற்றுப்புற கிராமப்புற மக்களின் நிலத்தடி நீராதாரமாகவும் விளங்குகிறது. சுமார் 417 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த பிரம்மாண்ட ஏரி மழைக்காலங்களில் நிரம்பி வழியும்போது கடல்போல் காட்சியளிக்கிறது. ஏரியில் உபரிநீர் வெளியேறும் கலங்கல் என்று அழைக்கப்படும் பகுதி சுமார் 300 அடி தூரத்திற்கு உள்ளது.

இந்த கலங்களில் உபரிநீர் குற்றால அருவிபோல் பேரிரைச்சலோடு தண்ணீர் வெளியேறும் காட்சியைப் பார்க்க ஆண்டுதோறும் சென்னை மற்றும் சுற்றுப்புற மக்கள் வந்து செல்லும் சுற்றுலாத்தலமாக மாறி விடுகிறது. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை தொடங்கி 3 வாரங்கள் ஆனாலும், தையூர் ஏரி நிரம்பும் அளவிற்கு மழை பெய்யாத நிலையே இருந்தது. நேற்று முன்தினம் இரவு மற்றும் நேற்று காலை பெய்த கனமழையின் காரணமாக தையூர் ஏரியின் நீர்வரத்து கால்வாய்களில் தண்ணீர் அதிகரித்து, தையூர் ஏரி நேற்று காலை முதல் நிரம்பி வழிய தொடங்கியது.

தகவலறிந்த சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்தவர்கள் மோட்டார் சைக்கிள், ஆட்டோ ஆகியவற்றில் தையூர் ஏரியை நோக்கி படையெடுத்தனர். ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீரில் குளித்து மகிழ்ந்தனர். வருவாய்த்துறை சார்பில், பொதுமக்கள் ஏரியில் இறங்கி குளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post தண்ணீர் நிரம்பி அருவிபோல் கொட்டுவதால் சுற்றுலா தலமாக மாறிய தையூர் ஏரி appeared first on Dinakaran.

Tags : Lake Taiyur ,Tiruporur ,Taiyur Lake ,Dinakaran ,
× RELATED அரசு பள்ளியில் மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீர்