×

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக 153 ஏரிகள் நிரம்பின: அதிகபட்ச மழை அளவு 98.6 மிமீ

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், குன்றத்தூர், உத்திரமேரூர், வாலாஜாபாத் உள்பட பல்வேறு பகுதி சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடக்கிறது. இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடர் கனமழை பெய்தது. இதைத் தொடர்ந்து காஞ்சிபுரத்தில் அதிகபட்சமாக 98.6 மி.மீ மழை பதிவானது. நேற்று மாலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை குறைந்த நேரத்தில் 71.60 மி.மீ மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் புகுந்தது.

இதனால் காஞ்சிபுரத்தில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. காஞ்சிபுரத்தில் பல்லவர் மேடு, அருந்ததி பாளையத்தில் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளில் வெள்ள நீர் புகுந்தது. இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி காஞ்சிபுரத்தில் 98.6 மிமீ, உத்திரமேரூரில் 19 மிமீ, வாலாஜாபாத் 35 மிமீ, பெரும்புதூர் 26.9 மிமீ, குன்றத்தூர் 39 மிமீ, செம்பரம்பாக்கத்தில் 37.2 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில், 45 ஏரிகள் முழு கொள்ளவை எட்டியுள்ளது. இதில் 29 ஏரிகள் 75 சதவீதமும், 72 ஏரிகள் 50 சதவீதம், 164 ஏரிகள் 25 சதவீதத்தை எட்டின. இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 528 ஏரிகளில் 108 ஏரிகள் முழு கொள்ளவையும், 135 ஏரிகள் 75 சதவீதமும், 154 ஏரிகள் 50 சதவீதம், 116 ஏரிகள் 25 சதவீதம் நிரம்பியுள்ளன.

மேலும், குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர் பாசனத்துக்கு பயன்பட்டு வரும் பெரிய ஏரிகளான தாமல், பெரும்புதூர், பிள்ளைப்பாக்கம், தென்னேரி, மணிமங்கலம், உத்திரமேரூர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய ஏரிகளான கொளவாய், தையூர், மானாமதி, கொண்டங்கி போன்ற ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில், கல்பாக்கம் அருகே உள்ள வாயலூர் தடுப்பணை நிரம்பியதால், அந்த ஏரியிலிருந்து 2170.64 கன அடி உபரிநீர் வெளியேறி வருகிறது. இவற்றை கண்காணிக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கனமழை காரணமாக 153 ஏரிகள் நிரம்பின: அதிகபட்ச மழை அளவு 98.6 மிமீ appeared first on Dinakaran.

Tags : Kanchipuram ,Chengalpattu district ,Sriperumbudur ,Kunradur ,Uttaramerur ,
× RELATED காஞ்சிபுரம், செங்கல்பட்டு...