×

டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை

சென்னை: டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதையும், சுமார் இரண்டு மாதங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், ஒருசில உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. எனவே சுகாதாரத் துறையும், அரசும் விழித்துக்கொண்டு தமிழகம் முழுவதும் அம்மாவின் ஆட்சியில் நடத்தியதைப் போன்று காய்ச்சல் முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி, நோய்களைக் கண்டறிந்து அவற்றை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, 30.7.2023, 29.9.2023 ஆகிய தேதிகளில் வெளியிட்டுள்ள எனது அறிக்கைகள் மற்றும் பேட்டிகளின் வாயிலாக அரசை வலியுறுத்தி இருந்தேன்.

இந்நிலையில் நேற்று (26.11.2023), மதுரை மாநகராட்சிப் பகுதியில் 1 வயது குழந்தை, 2 சிறுவர்கள் உள்ளிட்ட 4 பேர்; புறநகர் பகுதிகளில் 5 சிறுவர்கள் உள்ளிட்ட 9 பேர் என்று மொத்தம் 13 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும், மதுரை மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர் என்றும் செய்திகள் தெரிய வருகிறது. இதேபோன்று நேற்று, ஒரே நாளில் மதுரையில் 67 பேர் சாதாரண காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்; மாவட்டம் முழுவதும் சாதாரண காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதாகவும்; கடந்த 30 நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாதாரண காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேபோல், புதுக்கோட்டையில் ஓரிரு நாளில் புதிதாக 59 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும், இதுவரை காய்ச்சலால் 229 பேர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும், ஏற்கெனவே, டெங்கு காய்ச்சலுக்கு சிலர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமிழகத்தில் நிலவும் அவலங்களை சுட்டிக்காட்டும் போது, அதிலுள்ள உண்மைகளைப் புரிந்துகொண்டு, தமிழக மக்களின் நலன் சம்பந்தமான நடவடிக்கைகளை உடனடியாக செயல்படுத்த வேண்டிய கடமை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் உண்டு.

எனவே, நான் அறிக்கைகளில் சுட்டிக்காட்டிய குறைகளை உடனடியாகக் களைய இந்த அரசை வலியுறுத்துகிறேன். குறிப்பாக, இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள டெங்கு காய்ச்சல் பரவலை போர்க்கால அடிப்படையில் கட்டுப்படுத்த, இம்மழைக் காலத்தில் உடனடியாக தமிழகம் முழுவதும் தொடர்ந்து காய்ச்சல் முகாம்களை அதிக அளவில் நடத்தி, டெங்கு, ப்ளு, டைபாய்ட் போன்ற விஷக் காய்ச்சல்களைக் கண்டறிந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாகத் தேவையான மருத்துவ உதவிகளை அளித்திட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

The post டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Edappadi Palanisami ,Tamil government ,Chennai ,Tamil Nadu ,Edapadi Palanisami ,Tamil Nadu Government ,
× RELATED சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில்...