×

புத்துணர்ச்சி தரும் புதினா!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

உணவே மருந்து, உணவே மருந்துக்கு துணை என நாம் அனைவரும் அறிவோம். அவ்வகையில் குறைந்தவிலையில் அனைவராலும் எளிதில் வாங்கக் கூடிய கீரைகள் நமது உடல் நலனை மேம்படுத்துவதில் சிறந்து விளங்குகிறது. அதிலும் குறிப்பாக அதிக நறுமணம் கொண்ட புதினாக் கீரையை அனைவரும் சமையலில் பயன்படுத்திவருகிறார்கள். இது உணவுகளில் சுவையினை அதிகரிக்கவும், நறுமணத்தை அளிக்கவும் பயன்படுத்தபட்டு வருகிறது. இருப்பினும் இக்கீரையை வாசனைப்பொருளாக மட்டுமின்றி பல்வேறு மருத்துவ காரணங்களுக்காகவும் தமிழ் சமூகம் பயன்படுத்தி வந்துள்ளது.

புதினாக்கீரை லாமினேசியே எனும் தாவரக்குடும்பத்தை சார்ந்தது. இதன் அறிவியல் பெயர் மெந்தா ஸ்பைகாட்டா எனவும் மெந்தா விரிடிஸ் எனவும் அழைக்கப்படுகிறது. இக்கீரை 30 செ.மீ முதல் 100 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது. இதன் இலை 5.செ. மீ. முதல் 9 செ.மீ நீளமுடையவை. இத்தாவரத்தின் இலை, காம்பு மற்றும் வேர் என அனைத்து பாகங்களும் மருத்துவக் குணமுடையவை. புதினாக்கீரை ஐரோப்பா, ஆசியா மற்றும் அமெரிக்கா கண்டங்களில் பரவலாக காணப்படுகிறது. குறிப்பாக இத்தாலி, சீனா, இந்தியா போன்ற நாடுகள் தொன்றுதொட்டே இக்கீரையை உணவுகளில் சேர்த்து வந்துள்ளனர்.

புதினாக்கீரையில் காணப்படும் சத்துகள்

நீர்ச்சத்து 92 சதவீதம், கார்போஹேட்ரேட் – 2.9 சதவீதம், புரதச்சத்து – 2 சதவீதம், தாதுக்கள் – 1.6 சதவீதம், கொழுப்புச்சத்து – 0.6 சதவீதம் மற்றும் நார்சத்து 0.5 சதவீதம், என பலவகை சத்துக்களை இக்கீரை கொண்டுள்ளது. மேலும், ஏ, பி, மற்றும் சி வைட்டமின்களும் இக்கீரையில் உள்ளது.

புதினாவில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்

புதினாக் கீரை அதிக நறுமணம் கொண்டவையாக திகழ்வதற்கு காரணம் இதில் இருக்கும் மெந்தால் மூலக்கூறுகள்தான். அதுமட்டுமில்லாமல் புதினாவின் மருத்துவப் பண்புகளுக்கு அடிப்படையாக அமைவது மெந்தால், சினியோல், புலிகோன் காம்பிரின், கார்வோன், மெந்தோன், ஐஸோமெந்தோன், லினலூல் காம்பீன் மற்றும் பி-சைமீன் உள்ளிட்ட மூலக்கூறுகளேயாகும்.

புதினாவின் மருத்துவப் பண்புகள்

புதினாக்கீரை மன அழுத்தத்தை சீர்படுத்த பெரிதும் உதவுகிறது. இன்று பெரும்பாலானோர் பல்வேறு சூழ்நிலைக் காரணங்களால் மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டு தங்களது அன்றாட பணியில் சிறப்புடன் செயல்பட முடியாமல் தவிக்கிறார்கள். இத்தகைய பிரச்னைக்கு உட்பட்டவர்கள் புதினாக்கீரையை நீருடன் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து குடித்து வர, மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். ஏனெனில் இதில் உள்ளடங்கிய மெந்தால் மூலக்கூறுக்கு ஆண்டிடெப்ரஸன்ட் தன்மை இருப்பதாக ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிக காற்று மாசுபடுதல், ஒவ்வாமை, புகைபிடித்தல், உடல் உழைப்பின்றி இருத்தல் போன்ற பல்வேறு காரணங்களால் நுரையீரல் பாதிப்படைநது, மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. இதனை எதிர்கொள்வதற்கும் புதினாகீரையை அடிக்கடி உணவில் சேர்ப்பது நல்ல பலனைத் தரும்.ஒருவர் நன்றாக பணி செய்யவும், சிறப்புடன் செயல்படவும் மூளையின் செயல்பாடும் எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு வயிற்றின் செயல்பாடும் சீராக இருத்தல் அவசியம்.

இன்று பெரும்பாலானோர் கடுமையான பணிச்சூழலின் காரணமாக, உணவினை தவிர்த்து டீ அருந்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இப்படி அடிக்கடி அருந்தும் டீ அளவுக்கு அதிகமாகும்போது வயிறு உப்புசம், செரிமானக் கோளாறு லாக்டோஸ் சகிப்பதன்மை அற்ற நிலை, பசியின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். இதனை தவிர்க்க புதினா டீ அருந்தி பயன்பெறலாம். ஏனெனில் இதில் காணப்படும் மூலக்கூறு வயிற்றில் உள்ள அமில காரத்தன்மையை சீர்செய்கிறது.

புதினாக்கீரை தோல் சம்பந்தமான பிரச்னைகளுக்கு தீர்வாகவும் சருமப் பொலிவினை மேம்படுத்தவும் பயன்படுகிறது. புதினா இலைச் சாறினை முகத்தில் தடவி வர
தேவையற்ற கரும்புள்ளிகள் மறையக்கூடும்.உடல் எடையை சமநிலையில் வைத்திருக்க விரும்புபவர்கள் 5 முதல் 7 வரையிலான புதினா இலைகளை ஒரு டம்ளர் நீரில் போட்டுக் கொதிக்க வைத்து எலுமிச்சை சாறு மற்றும் தேனுடன் சேர்த்து குடிப்பது நல்லதொரு மாற்றத்தை தரக்கூடும்.

இதுமட்டுமில்லாமல் புதினாக்கீரை பல்வலி, பித்த மயக்கம், வயிற்றுப் புண், காய்ச்சல் மற்றும் காலரா போன்ற நோய்களையும் கட்டுபடுத்துகிறது. மேலும், ரத்தத்தை சுத்தப்படுத்தவும். கெட்ட கொழுப்புகளை நீக்கவும் பயன்படுகிறது. ஆகையால் இத்தகைய சிறப்பு வாய்ந்த புதினாக்கீரையை அன்றாட உணவில் துவையல், சட்னி, புதினாஜூஸ், புதினா குழம்பு மற்றும் புதினா டீ என ஏதோ ஒரு வகையில் எடுத்து வருவது நலம் தரும்.

புதினாவின் மருத்துவ குணங்களை நம் முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே அறிந்திருப்பதை கீழ்க்கண்ட பதார்த்த குணபாட பாடலின் மூலம் அறியலாம்.

புதியன் மூலிக்குணம் – இதுவே புதினாஅருசியோடு வாந்தி யக்கினியா மந்தங்குருதி யழுக்குமலக் கொட்ட லிரியுந்துதியதன்று சோறிரங்குந் தொல்லுலகி நாளும் புதியன் மூலிகையைப் புகல்.

The post புத்துணர்ச்சி தரும் புதினா! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kungum ,R. Sharmila ,Dinakaran ,
× RELATED சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான் கீரை!