×

தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் நோயாளிகளின் உதவியாளர் தங்க ஏசி அறை :டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை

புதுடெல்லி: நோயாளிகளின் உதவியாளர்கள் வசதிக்காக, ஐசியு வார்டுகளில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அறை, செல்போன் சார்ஜிங் பாயிண்ட், வழிபாட்டு அறை உள்ளிட்ட வசதிகளை மேற்கொள்ள எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக தலைநகர் மட்டுமின்றி அண்டை மாநிலங்களை சேர்ந்த பலரும் வருகின்றனர். இதனால் அதிக அளவில் கூட்டம் நிரம்பி வழியும். இதனால் டெல்லியில் குளிர் அதிகரித்து காணப்படும் டிசம்பர் மாதங்களில் எய்ம்ஸ் வளாகத்தின் வெளியிடங்களில் நோயாளிகளின் உறவினர்கள் திறந்தவெளியில் காத்துகிடப்பர். அவர்களுக்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்படுவது வாடிக்கை.

இந்நிலையில், மருத்துவமனையில் நோயாளிகளின் அருகே அவர்களுக்கு உதவுவதற்காக உடனிருப்பவர்கள் தங்குவதற்கு எய்ம்ஸ் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. குறிப்பாக, ஐசியு பிரிவு நோயாளிகளின் உறவினர்களுக்கு காத்திருப்பு அறையை தயார் செய்துள்ளது. இதுமட்டுமின்றி நாற்காலிகள் உடன் இணைந்த படுக்கைகள், மொபைல் சார்ஜிங் பாயிண்ட்கள், பல்வேறு மதத்தை சார்ந்தவர்களுக்கான பிரார்த்தனை கூடங்கள் உட்பட பல அடிப்படை வசதிகளை ஐசியு வார்டுடன் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து காத்திருப்புப் பகுதிகளிலும் ஏர் கண்டிஷனிங் செய்யவும் எய்ம்ஸ் அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களின் உடமைகளை பாதுகாப்பாக வைக்க லாக்கர்கள், குடிநீர் வசதி, ஆரோக்கியமான தின்பண்டங்கள் மற்றும் பேக் செய்யப்பட்ட பானங்கள் வழங்கும் இயந்திரங்கள், இண்டர்காம் வசதி, ஆண் மற்றும் பெண்களுக்கான கழிப்பறைகள், சிசிடிவி கேமராக்கள் மற்றும் நுழைவு மற்றும் வெளியேறும் இடங்களில் பாதுகாப்புக் காவலாளிகளை வரும் காலங்களில் நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி எய்ம்ஸ் நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், நோயாளிகளின் உதவியாளர்களுக்கு ஏற்ப, காத்திருக்கும் பகுதி அமைதியான மண்டலமாக உருவாக்கப்பட உள்ளது. எல்லா நேரங்களிலும் மொபைல் சிக்னல்கள் கிடைக்காமல் போகலாம் என்பதால், நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களில் உள்ள காவலர்கள் இண்டர்காமில் அழைப்புகளைப் பெறும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அவர்கள் அந்தந்த ஐசியுவில் தேவைப்பட்டால் உதவியாளர்களுக்குத் தெரிவிப்பார்கள். அதே இண்டர்காம் வசதியை உதவியாளர்கள் அவசர மற்றும் குறுகிய கால தொலைபேசி அழைப்புகளுக்கும் பயன்படுத்த முடியும். இந்த வசதிகள் செய்யப்படுவது பற்றி ரெசிடென்ட் மருத்துவர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் வினய் குமார் மகிழ்ச்சி தெரிவித்தார்.

The post தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படும் நோயாளிகளின் உதவியாளர் தங்க ஏசி அறை :டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை appeared first on Dinakaran.

Tags : Delhi Aims Hospital ,New Delhi ,Dinakaran ,
× RELATED ஸ்டேபிள் பருத்தி இறக்குமதி வரி முழு விலக்கு: ஒன்றிய அரசு அறிவிப்பு