×

மழை காரணமாக பசுமைக்கு திரும்பிய ரோஜா பூங்கா

 

ஊட்டி,நவ.27: மழை காரணமாக ஊட்டி ரோஜா பூங்கா பசுமையாக காட்சியளிக்கிறது. நீலகிரி மாவட்டம் முழுமையான தோட்டக்கலை மாவட்டமாக விளங்கி வருகிறது.இங்கு தோட்டக்கலை பயிர்களான மலை காய்கறிகள்,தேயிலை உள்ளிட்டவைகள் விளைவிக்கப்படுகின்றன. இதுதவிர கோடை வாச தலமாக உள்ளதால் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் தாவரவியல் பூங்கா,குன்னூர் சிம்ஸ்பூங்கா உள்ளிட்ட பூங்காக்கள் உள்ளன. நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

இதனை ஏராளமான சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்வார்கள். கடந்த 1995ம் ஆண்டு 100வது மலர் கண்காட்சி பூங்காவில் நடந்தது. இதனை சிறப்பிக்கும் வகையில் ஊட்டி விஜயநகரம் பகுதியில் ரோஜா பூங்கா அமைக்கப்பட்டது. இப்பூங்கா 4.40 ஹெக்டர் பரப்பளவில் அமைந்து உள்ளது. மலைச்சரிவான பகுதி மற்றும் 5 அடுக்குகளில் 4,200 வகைகளை சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் நுழைந்ததும் அவர்களை வரவேற்கும் வகையில் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்து குலுங்குகின்றன.அங்கு அமைக்கப்பட்டு உள்ள 4 காட்சி முனைகளில் நின்றபடி பூங்காவின் பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம். இந்நிலையில் ஊட்டியில் அடிக்கடி பெய்து வரும் மழை காரணமாக ரோஜா பூங்கா பசுமையாக காட்சியளிக்கிறது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.

The post மழை காரணமாக பசுமைக்கு திரும்பிய ரோஜா பூங்கா appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Rose Park ,Nilgiri ,Rose park ,Dinakaran ,
× RELATED ஊட்டி ரோஜா பூங்காவில் கோடை சீசனுக்காக ரோஜா செடிகள் கவாத்து பணி துவக்கம்