×

காஞ்சிபுரம் அருகே சேதமடைந்த வேகவதி ஆற்று தரைப்பாலம்: சீரமைக்க வலியுறுத்தல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த தாட்டித்தோப்பு முருகன் பட்டு நெசவாளர் குடியிருப்பு பகுதியில் சேதமடைந்துள்ள வேகவதி ஆற்றின் தரைப்பாலத்தை சீரமைத்து தரவேண்டும் என பொதுமக்கள் வலிறுத்தியுள்ளனர். காஞ்சிபுரம் 27வது வார்டு பகுதியில் தாட்டித்தோப்பு, முருகன் பட்டு நெசவாளர் குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதியில், சுமார் 1000க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு காஞ்சிபுரத்தில் இருந்து செல்லும் வழியில் வேகவதி ஆற்றில் தரைப்பாலம் உள்ளது. இந்த தரைப்பாலம், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சேதமடைந்தது.

இதனால், அப்பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.மேலும், இந்த தரைப்பாலம் வழியாக அருகில் உள்ள பல்லவன் நகர், கணேஷ் நகர், வரதராஜா நகர், அண்ணா நகர், செல்லியம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளுக்கும் பொதுமக்கள் சென்றுவர வேண்டிய நிலை உள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பாலம் சீரமைக்க படாமல் உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின்போது, வேகவதி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் இந்த தரைப்பாலம் முழுவதுமாக வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டது‌.

தொடர்ந்து வேகவதி ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால், முருகன் காலனி குடியிருப்பு வாசிகள் வேறு வழியின்றி மாற்று வழியை பயன்படுத்தி வந்தனர். இதனால், பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், நெசவாளர்கள் மற்றும் தனியார் கம்பெனிகளுக்கு வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: சுமார் 1000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள இப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சேதமடைந்த பாலப்பகுதியை அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.

வேகவதி ஆற்றில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்ட பிறகு, அப்பகுதியில் 2 சிமென்ட் பைப்புகளை மட்டும் மணல் மூட்டைகளை அடுக்கி சாலை அமைத்துக் கொடுத்துள்ளனர். இதனால், சைக்கிளில் செல்லும் பள்ளி மாணவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்படுகிறது. மேலும், வீடு கட்ட கட்டுமான பொருள்கள் எடுத்துச்செல்லும் லாரிகள் விபத்தில் சிக்கும் அபாயமும் உள்ளது. இந்த பாலம் இல்லையென்றால் சுமார் 2 கிமீ தூரம் சுற்றி வரவேண்டியுள்ளது. எனவே, பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவர்கள், வேலைக்கு செல்வோர், குடியிருப்புவாசிகள் என அனைத்து தரப்பினரும் ஆபத்தான முறையில் இந்த பாலப்பகுதி வழியாக கடந்து செல்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இது சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘நெசவாளர்கள், கூலித் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் இப்பகுதி மக்கள் வாழ்வாதாரத்திற்கு காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். எனவே, போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள சேதமடைந்த பாலத்தை சீரமைத்து தரக்கோரி நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர், இந்த சேதமடைந்த பாலப்பகுதியை பார்வையிட்டு விட்டு சென்றார். ஆனாலும், இதுவரை பாலம் சீரமைக்கப்படவில்லை. எனவே, விரைவில் சீரமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால், இப்பகுதி மக்களுடன் இணைந்து மறியல் போராட்டம் நடத்தப்படும்’ என்றனர்.

The post காஞ்சிபுரம் அருகே சேதமடைந்த வேகவதி ஆற்று தரைப்பாலம்: சீரமைக்க வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Vegavati River ,Kanchipuram ,Murugan ,
× RELATED ஆடி கிருத்திகையை முன்னிட்டு காஞ்சியில் காவடி தயாரிப்பு பணி மும்முரம்