×

முதல் 2 ஆண்டுக்கு பெட்டிகளை தெற்கு ரயில்வே வழங்கும் பறக்கும் ரயில் சேவை தமிழ்நாடு அரசு வசமாகிறது: விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து

சென்னை: பறக்கும் ரயில் சேவை தமிழ்நாடு அரசு வசமாக உள்ளது. இதற்காக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று கூறப்படுகிறது. முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரயில் பெட்டிகளை இலவசமாக வழங்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை நகரம் நமது நாட்டிலேயே வலுவான பொது போக்குவரத்தை கொண்ட ஒரு நகரமாகும். அரசு பேருந்துகள், மின்சார ரயில்கள், பறக்கும் ரயில்கள், மெட்ரோ, வந்தே பாரத் என அனைத்து விதமான போக்குவரத்து சேவையும் இங்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் சென்னையில் பயணிகளின் போக்குவரத்து தேவையை பெரிதும் தீர்த்து வைப்பதில் புறநகர் மின்சார ரயில்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. சென்னை கடற்கரை- தாம்பரம் – செங்கல்பட்டு, சென்ட்ரல்- அரக்கோணம், சென்ட்ரல்- கும்மிடிப்பூண்டி, கடற்கரை- திருவெற்றியூர், கடற்கரை-வேளச்சேரி என புறநகர் ரயில் சேவை சென்னையில் உள்ள முக்கிய பகுதிகளை இணைக்கிறது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த புறநகர் ரயில்களை பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் பீக் நேரங்களில் ரயில்கள் சில நிமிடங்கள் தாமதம் ஆனாலே ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலை மோதும்.

அதேபோல், சென்னை கடற்கரையில் இருந்து வேளச்சேரி இடையே பறக்கும் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் ஐடி நிறுவனங்கள் நிறைந்துள்ள வேளச்சேரி, பெருங்குடி, திருவான்மியூர், கஸ்தூரிபாய் நகர் உள்ளிட்ட பகுதிகள் மற்றும் மெரினா கடற்கரைக்கு செல்ல பயணிகள் அதிகம் பயன்படுத்தும் திருவல்லிக்கேணி ரயில் நிலையம், சேப்பாக்கம் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகள் வழியாக இந்த ரயில் செல்கிறது. இந்த நிலையில், சமீப நாட்களாக பறக்கும் ரயில் சேவை திருப்திகரமாக இல்லை என தொடர்ந்து பயணிகள் புகார் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, சென்னை கடற்கரை-வேளச்சேரி பறக்கும் ரயில் சேவையை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

ரயில் இயக்கம் முதல் அனைத்து சேவைகளையும் கையகப்படுத்துவது தொடர்பாக வணிக திட்ட அறிக்கை தயார் செய்ய திட்டமிட்டுள்ளது. பறக்கும் ரயில் நிலையங்களை மறுசீரமைப்பு செய்து மெட்ரோ ரயில் நிலையம்போல் மாற்ற சென்னை பெருநகர ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் திட்டமிட்டிருக்கிறது. மந்தைவெளி, கிரீன்வேஸ் சாலை, கோட்டூர்புரம், கஸ்தூரிபா நகர், இந்திரா நகர், திருவான்மியூர், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி ரயில் நிலையங்கள் இதில் அடங்கும். இவை 1 முதல் 4 தளங்கள் கொண்ட ரயில் நிலையங்களாக தற்போது உள்ளது; 20,44,400 ச.மீ. அளவில் இடங்கள் உள்ளது.

வணிக திட்ட அறிக்கை தயார் செய்வது தொடர்பான நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டு,டெண்டர் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், தற்போது இது குறித்து மேலும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தெற்கு ரயில்வே மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. தற்போது உள்ள நிலையில் பறக்கும் ரயில்களை ஒப்படைக்க தெற்கு ரயில்வே சம்மதித்துள்ளதாகவும், இந்த ஒப்பந்தம் அரசு ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் பறக்கும் ரயில்களை பெருநகர போக்குவரத்து ஆணையம் எடுத்து நடத்த ஏதுவாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி ஓராண்டுக்கு பறக்கும் ரயிரல்களின் செயல்பாடுகளை தொடர்ந்து தெற்கு ரயில்வே கவனிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பயணிகளை அதிகரிக்கவும், ரயில் நிலையங்களில் புதிய கடைகளை அமைத்து வருவாயை அதிகரிக்கவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ரயில் பெட்டிகளை இலவசமாக வழங்கவும், அதன் பிறகு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி விட்டு அந்த பெட்டிகளை சென்னை பெருநகர ஆணையம் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், சென்னை கடற்கரை வரை புறநகர் ரயில்கள் மற்றும் பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் இரண்டையும் சிக்கல் இல்லாமல் இயக்குவது குறித்து விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.பறக்கும் ரயில் சேவையை மேம்படுத்த மாநில அரசால் வாங்கப்படும் ரயில் பெட்டிகள் ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டால், அதற்கான தொகையை மாநில அரசுக்கு திரும்ப அளிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

* பயணிகளை அதிகரிக்கவும், ரயில் நிலையங்களில் புதிய கடைகளை அமைத்து வருவாயை அதிகரிக்கவும் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது.

* முதல் 2 ஆண்டுகளுக்கு ரயில் பெட்டிகளை இலவசமாக வழங்கவும், அதன் பிறகு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்தி விட்டு அந்த பெட்டிகளை சென்னை பெருநகர ஆணையம் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

* சென்னை கடற்கரை வரை புறநகர் ரயில்கள் மற்றும் பறக்கும் ரயில்கள் இயக்கப்படும் நிலையில் இரண்டையும் சிக்கல் இல்லாமல் இயக்குவது குறித்த விரிவான விளக்கமும் அளிக்கப்பட்டுள்ளது.

The post முதல் 2 ஆண்டுக்கு பெட்டிகளை தெற்கு ரயில்வே வழங்கும் பறக்கும் ரயில் சேவை தமிழ்நாடு அரசு வசமாகிறது: விரைவில் ஒப்பந்தம் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Tamil Nadu government ,Dinakaran ,
× RELATED வடசென்னை-மத்திய சென்னையை இணைக்கும்...