×

இசிஆர் பகுதியில் பெருகிய அடுக்குமாடி குடியிருப்பு, ஆழ்துளை கிணறுகளால் நிலத்தடி நீரில் அதிகரித்த உப்புத்தன்மை: நிபுணர்கள் நடத்திய ஆய்வில் பகீர்,நன்னீராக்க சோலார் கருவி கண்டுபிடிப்பு

சென்னை: கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் அதை சூழ்ந்துள்ள நிலப்பகுதிகள் அனைத்திலும் நிலத்தடி நீரின் தன்மை அதிக உப்புக் கலந்துள்ளதாக மாறி வருகிறது என்றுஆய்வில் தெரியவந்துள்ளது. நீரில் உப்புத்தன்மையை நீக்க சோலார் கருவியும் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலத்தில் இருந்து எடுக்கப்படும் நீர் நல்ல நீராக இருந்தால்தான் பாசனத்துக்கும், பருகும் குடிநீராகவும் பயன்படுத்த முடியும். ஆனால், நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படுவதால் நீர் ஆதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, கடற்கரையோர பகுதிகளில் நிலத்தடி நீர் அதிகமாக உறிஞ்சப்படும்போது, கடல் நீர் உட்புகுந்து விடுவதால், அப்பகுதியில் நிலத்தடி நீர் உப்புத்தன்மை கொண்டதாக மாறி விடுகிறது. இந்த நிலைதான் கிழக்குக் கடற்கரை சாலை (இசிஆர்) பகுதிகளில் ஏற்பட்டுள்ளது.

கிழக்கு கடற்கரை சாலையில் அடுக்குமாடிக் கட்டிடங்கள் அதிகரிப்பு, தண்ணீர் தேவைக்கு அளவுக்கு அதிகமாக ஆழ்துளைக் கிணறுகள் போட்டு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது காரணமாக, கடல் நீர் படிப்படியாக நிலத்தின் ஊடாக பரவி அந்த பகுதி முழுவதும் தற்போது உப்புத் தன்மை கலந்த நிலத்தடி நீராக மாறியுள்ளது. இப்பகுதியில் புதிய கட்டுமானப் பணிகளும் அதிகரித்து வருவதால் நிலத்தடி அதிகமாக ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் உறிஞ்சப்படுகிறது. நிலத்தடி நீர் குறைந்து நன்னீரின் தன்மையும் குறைந்து, உப்பு நீராக மாறி வருகிறது. சென்னை நகருக்கு அடுத்துள்ள பகுதி என்பதால் பலரும் அந்த பகுதிகளில் அதிக அளவில் குடியேறி வருகின்றனர்.

இதனிடையே, கிழக்கு கடற்கரையையொட்டி திருவான்மியூர் முதல் முட்டுக்காடு பகுதி வரை உள்ள இடங்களில் நிலத்தடி நீர் மாதிரிகள் சேகரித்து சில பல்கலைக் கழக மாணவ மாணவியர் நடத்தி ஆய்வின் முடிவு, பெரும் அதிர்ச்சியை நமக்கு தெரிவிக்கிறது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதித்துள்ள அளவை தாண்டி நிலத்தடி நீர் உப்புத் தன்மையாக மாறிவிடுமோ என்ற அச்சமும் இப்போது ஏற்பட்டுள்ளது. இந்த ஆ்ய்வில் பங்கேற்ற ஆய்வாளர்கள் இந்த உப்புத் தன்மையை மாற்றி அமைக்க சோலார் டிஸ்டிலேஷன் சிஸ்டம் ஒன்றையும் வடிவமைத்துள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்ற சாஸ்தா பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்வி நிறுவனத்தின் வேதியியல் பேராசிரியர் காஞ்சனா, மழை மையத்தின் நிறுவனத்தின் நிறுவனர் சேகர் ராகவன், ஆகியோர் கூறியதாவது: தமிழ்நாடு, கிழக்கு கடற்கரை பகுதியில் நிலத்தடி நீரின் தன்மை குறித்து கண்டறிவது மற்றும் நிலத்தடி நீரின் தன்மையை மேலும் மேம்படுத்துவது தொடர்பான ஆய்வு சமீபத்தில் நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் பல்வேறு பல்கலைக் கழகங்களை சேர்ந்த மாணவ மாணவியர் பங்கேற்றனர். அவர்களுடன் ஆய்வாளர்களும் பங்கேற்றனர்.

உப்பு நிலத்து அடியில் உள்ள உப்புத் தன்மையை மாற்றுவதற்காக, ஆய்வாளர்கள் சூரிய சக்தியில் இயங்கும் நீர் வடிப்பு(டிஸ்டிலேஷன்) அமைப்பை வடிவமைத்தனர். அதாவது சோலார் பேனல் மூலம் நீரைக்காய்ச்சி வடிகட்டி, உப்புகளை அகற்றி, நீராவிகளை ஒடுக்கி தூய்மையான நீரை உருவாக்கினர். அப்போது நீரின் பிஎச் அளவு 7.1க்குள் இருந்தது. டிடிஎஸ் 45மிகிக்குள் இருந்தது. சோடியம் மற்றும் பொட்டாசியம் அளவுகள் 3.5மிகிக்குள் இருந்தது. இது சூரிய சக்தியில் இயங்கும் உப்புநீக்கும் முறையாகும். இந்த செயல் முறை ஆற்றல் மிக்கதாக இருந்தாலும், சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பயன்பாடு இந்த செயல் முறையை இன்னும் நிலையானதாக மாற்றும். இவ்வாறு ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

* அதிக கட்டிடங்களால் வந்த ஆபத்து
கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடந்த ஆய்வில் அதிகளவில் புதிய கட்டிடங்கள் கட்டப்படுவது, அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகளை அமைத்து அதன் மூலம் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவது நிலத்தடி நீர் உப்பு நீராக மாறியதற்கு முக்கிய காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. நீர் தேவையுடன், அதிக அளவு தண்ணீர் சேமிக்கும் கட்டடங்கள் கிழக்கு கடற்கரை சாலையில் அதிக அளவில் கட்டப்பட்டு வருகின்றன. அதன் மூலம் இயற்கையாக அங்கு இருக்கும் தண்ணீர் வளம் குறைந்து வருகிறது.

மேலும் நிலத்தடி நீரை முறையற்ற வகையில் எடுப்பதும் அதிகரித்து வருகிறது. நிலத்தடி நீர் மட்டத்தில் நீர் குறைந்து கடல் நீர் உள்ளே நுழைந்து அந்த நீர் படிப்படியாக உப்பாக மாறும். பொதுவாக நிலத்தடி நீரின் தன்மைகளை பார்க்கும் போது, நீர் நிலைகளுக்குள் கடல் நீர் செல்வதை நிலத்தடி நீர் தடுக்கும் தடையாக செயல்படுகிறது. அதிக தண்ணீர் உறிஞ்சியதால் நிலத்தடி நீர் குறைந்து உப்பு நீர் உட்புகுந்து விட்டது என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

* பரிந்துரைத்த அளவை விட அதிக உப்புத் தன்மை
திருவான்மியூர் முதல் முட்டுக்காடு வரையிலான பகுதியில் நிலத்தடி நீரின் மாதிரிகளை ஆய்வாளர்கள் சேகரித்து உப்புத்தன்மையை சோதித்துப் பார்த்தனர். நிலத்தடி நீரில் முற்றிலும் கரைந்த திடப் பொருள்கள்(டிடிஎஸ்) பிஎச், சோடியம், மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வரம்புகள் அதிகரித்துள்ளது. பிஎச் வரம்பு என்பது 8.86 ஏற்கக் கூடியது. அதேபோல கரைந்த திடப்பொருட்கள்(டிடிஎஸ்) ஒரு லிட்டருக்கு 500மிகி இருக்கலாம். ஆனால் மேற்கண்ட நீர் மாதிரியில் 1200 மிகி இருக்கிறது. சோடியத்தின்(உப்பு) அளவு 200 மி.கி. இருக்கலாம். ஆனால் 362 மிகி வரை இருக்கிறது.

மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்களின்படி குடிப்பதற்கு ஏற்றுக்கொள்ளகூடிய வரம்புக்குள் தண்ணீர் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அந்தநீரை நாம் குடிக்க முடியும். இந்த அளவுக்கு அதிமாக இருந்தால் குடிக்க முடியாது. அதுதான் இங்கு நிகழ்ந்துள்ளது. மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ள அளவைத்தாண்டிவிட்டால் அந்த நீர் குடிப்பதற்கு ஏற்றதல்ல. இந்த அனுமதிக்கப்பட்ட வரம்புக்குள் உள்ள தண்ணீரை, வேறு நீர் ஆதாரம் இல்லாதபட்சத்தில் மட்டுமே உட்கொள்ள வேண்டும். குறிப்பாக ஒரு லிட்டருக்கு 2000மிகி என்பது மத்திய மாசுகட்டுப்பாட்டு வாரியம் அனுமதிக்கும் டிடிஎஸ் வரம்பு. அதைத் தாண்டிய நீர் குடிப்பதற்கு தகுதியற்றது என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post இசிஆர் பகுதியில் பெருகிய அடுக்குமாடி குடியிருப்பு, ஆழ்துளை கிணறுகளால் நிலத்தடி நீரில் அதிகரித்த உப்புத்தன்மை: நிபுணர்கள் நடத்திய ஆய்வில் பகீர்,நன்னீராக்க சோலார் கருவி கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : ECR ,Chennai ,East Coast Road ,
× RELATED மாமல்லபுரம் இசிஆர் சாலையில் எரியாத...