×

தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் விமானத்தில் செல்வது போன்ற புதிய அனுபவம்: பன்றி, மாட்டிறைச்சி தவிர எல்லா உணவும் கிடைக்க ஏற்பாடு


சென்னை: தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் விமானத்தில் செல்வது போன்ற புதிய அனுபவத்தை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. ரயில் பயணிகளின் பயண அனுபவத்தை சிறப்பாகவும், பயண நேரத்தை மிச்சப்படுத்தவும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் கடந்த 2022ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்த ரயில்கள் மக்களிடையே அதிக வரவேற்பை பெற்றுள்ளன. இது பயண நேரத்தை மிச்சப்படுத்துவதால் பயணிகள் இதை விரும்புகின்றனர். இந்நிலையில், பயணிகளுக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்த ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.

தற்போது வந்தே பாரத் ரயில்களில் செல்லும் பயணிகளுக்கு விமானத்தில் பயணிப்பது போன்ற அனுபவத்தை கொடுக்க பல்வேறு புதிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செப்டம்பர் மாத கணக்கீட்டின்படி நாட்டில் மொத்தம் 34 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நகரங்களுக்கிடையிலான இணைப்பை மேம்படுத்த பல புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. அதிவேக ரயில்சேவை, சிறப்பான உள்கட்டமைப்பு வசதி உள்ளிட்ட காரணங்களால் வந்தே பாரத் ரயில் சேவைக்கு பயணிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பு காணப்படுகிறது.

வந்தே பாரத் ரயில்கள் தொடங்கப்பட்டதன் மூலம் விமான கட்டணம் 20 % முதல் 30% வரை குறைந்துள்ளது. இந்நிலையில் யாத்ரிசேவா அனுபவந்த் என்ற பெயரில் ரயில்வே நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இதில் சோதனை முன்னோட்டமாக தெற்கு ரயில்வேயில் 6 வந்தே பாரத் ரயில்களில் மேம்படுத்தப்பட்ட தரமான சேவை அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவு, குளிர்பானம், குடிநீர், பயணத்திற்கு தேவையான முக்கியமான பொருட்கள் பயணிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

மேலும், இந்த புதிய திட்டத்தின் கீழ் பயணிகளுக்கு வருகை மற்றும் புறப்பாடுகளுக்கு பிறகு டாக்ஸி வழங்குதல், ரயில் நிலையத்தில் மாற்று திறனாளிகளுக்கு தாழ்தளம் வசதியை ஏற்படுத்தி கொடுத்தல், ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போதே சக்கர நாற்காலி உதவி தேவைப்பட்டால் அதனை பதிவு செய்யும் வகையில் இணையதளத்தில் மாற்றம் கொண்டு வருதல் உள்ளிட்ட சேவைகள் வழங்கப்பட உள்ளன. ரயில் பயணிகளுக்கான உணவு தயாரிக்கும் கூடத்தில் உணவின் தரத்தை ஆய்வு செய்ய சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பயணிகள் கியூஆர் கோடு வசதி மூலம் இந்த சமையல் கூடங்களை ஆன்லைனில் பார்த்து தரத்தை மதிப்பிடும்படி வசதி ஏற்படுத்துள்ளது.

அதே சமயம் ரயில் பயணிகளுக்கான உணவில் பன்றி மற்றும் மாட்டிறைச்சி இடம் பெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் பயணத்தின் போது, பயணிகள் பயணிக்கும் போது புகையிலை மற்றும் போதைப் பொருட்களைத் தவிர வேறு எந்த பொருட்களை வேண்டுமானாலும் விற்பனை செய்துகொள்ள கான்ட்ராக்டர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது சென்னை சென்ட்ரல் – கோவை, சென்னை சென்ட்ரல் – மைசூரு, சென்னை எழும்பூர் – நெல்லை, சென்னை சென்ட்ரல் – கோட்டயம், திருவனந்தபுரம் – காசர்கோடு ஆகிய ரயில்கள் தெற்கு ரயில்வே சார்பில் வந்தேபாரத் ரயில்களாக இயக்கப்படுகிறது.

The post தெற்கு ரயில்வே சார்பில் இயக்கப்படும் வந்தே பாரத் ரயிலில் விமானத்தில் செல்வது போன்ற புதிய அனுபவம்: பன்றி, மாட்டிறைச்சி தவிர எல்லா உணவும் கிடைக்க ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,Chennai ,Dinakaran ,
× RELATED வடசென்னை-மத்திய சென்னையை இணைக்கும்...